/indian-express-tamil/media/media_files/2025/10/12/comets-closest-approach-to-earth-2025-10-12-11-02-45.jpg)
பூமியை நோக்கிப் படையெடுக்கும் பனிக்கட்டி வால்நட்சத்திரங்கள்... வெறும் கண்ணால் பார்க்கலாம்!
இந்த அக்டோபர் மாதம் வானத்தை அண்ணாந்து பார்க்கும் ரசிகர்களுக்கு பிரமாண்டமான பரிசு காத்திருக்கிறது. பனிக்கட்டிகளால் ஆன 2 பிரகாசமான வால் நட்சத்திரங்கள் C/2025 A6 Lemmon மற்றும் C/2025 R2 SWAN பூமிக்கு மிக அருகில் வருவதால், அவை வானில் பாய்ந்து செல்வதை நேரில் காணும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
பூமியை நோக்கி வரும் இந்த அதிசய வால் நட்சத்திரங்கள் சிலமாத இடைவெளியில் கண்டறியப்பட்டவை. லெம்மன், இது அரிசோனாவில் உள்ள மவுண்ட் லெம்மன் ஆய்வகம் மூலம் கடந்த ஜனவரி 3 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. சுவான் உக்ரைன் வானியலாளர் விளாடிமிர் பெசுக்லி, நாசா-ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி தரவைப் பயன்படுத்தி செப்டம்பர் 10 அன்று இதனை அடையாளம் கண்டார்.
எப்போது, எவ்வளவு அருகில்?
இந்த 2 விருந்தாளிகளும் பூமிக்கு எப்போது அருகில் வந்து விருந்து படைக்கப் போகிறது. SWAN வால்நட்சத்திரம் அக்டோபர் 20 அன்று 38.6 மில்லியன் கி.மீ. தொலைவிலும், Lemmon வால் நட்சத்திரம் அக்டோபர் 21 அன்று 88.5 மில்லியன் கி.மீ. தொலைவிலும் வந்து செல்லும். இந்த வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு அருகில் பயணிப்பதால், அவற்றைப் பார்க்க உங்களுக்குக் குறுகிய காலமே கிடைக்கும். SWAN-ஐ மாலை நேரத்தில், சூரியன் மறைந்த பின் பார்க்கலாம். Lemmon-ஐ அதிகாலை நேரத்தில், விடியலுக்கு முன் பார்க்கலாம்.
மேரிலாந்து பல்கலைக் கழக வானியலாளர் குவான்சி யே மற்றும் லாஸ் கும்ப்ரஸ் ஆய்வகத்தின் முனைவர் கேரி ஹோல்ட் ஆகியோர் இந்த வால் நட்சத்திரங்களின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்கள். இந்த வால் நட்சத்திரங்கள், சூரிய குடும்பத்தின் தொலைதூர எல்லையில் உள்ள பனிக் கட்டி நிறைந்த ஊர்ட் மேகத்தில் இருந்து வருகின்றன. அதாவது, "சூரிய குடும்பம் உருவான ஆரம்ப காலத்தில் இருந்து கிட்டத்தட்ட மாறாமல் இருக்கும் ஆதிப் பொருட்களை" இவை சுமந்து வருகின்றன. இவற்றை ஆய்வு செய்வதன் மூலம் நமது சூரிய குடும்பத்தின் பிறப்பு ரகசியங்களை நாம் அறியலாம்!
தற்போது பிரகாசமடைந்து வரும் லெம்மன் வால் நட்சத்திரத்தை, வடக்கு அரைக்கோளத்தில் இருந்து பார்ப்பவர்கள் வெற்றுக்கண்ணால் கூட பார்க்க வாய்ப்புள்ளது. SWAN தென் அரைக்கோளத்தில் உள்ளவர்களுக்குச் சாதகமாக இருக்கும். நீங்க இந்த அழகிய காட்சிகளைப் பார்க்க வேண்டுமானால், ஒளி மாசு இல்லாத இருண்ட இடத்திற்குச் சென்று, பைனாகுலர்கள் (Binoculars) அல்லது சிறிய தொலைநோக்கி (Telescope) மூலம் பாருங்கள். இத்தாலியில் இருந்து ஒளிபரப்பாகும் விர்ச்சுவல் டெலஸ்கோப் திட்டத்தின் நேரலையில் இதைக் கண்டு ரசிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.