/indian-express-tamil/media/media_files/2025/09/28/rust-formation-on-the-moon-2025-09-28-14-47-54.jpg)
நிலவு மெதுவாகத் துரு பிடிக்கிறதா? நீரும் காற்றும் இல்லாத நிலவில் 'ரஸ்ட்' உருவானது எப்படி?
நிலவு என்றாலே, அமைதியான, வறண்ட, எந்த வேதியியல் மாற்றமும் நிகழாத ஒரு உலகம் என்றே நாம் இத்தனை காலம் நினைத்திருந்தோம். ஆனால், விஞ்ஞானிகள் இப்போது ஒரு புதிய மர்ம முடிச்சை அவிழ்த்திருக்கிறார்கள். திரவ நீரோ, சுவாசிக்க காற்றோ இல்லாத நிலவிலும் 'துரு' (Rust) உருவாகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்!
இந்த முரண்பட்ட செய்தி விஞ்ஞானிகள் மத்தியிலேயே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், துரு என்பது ஆக்ஸிஜனேற்றம் (Oxidation) என்னும் வேதியியல் மாற்றத்தால் உருவாவது. இந்த ஆக்ஸிஜனேற்றம் நிகழ, காற்று மற்றும் நீர் இரண்டுமே கட்டாயம் தேவை. ஆனால், நிலவில் இரும்புத் தாது கொண்ட மண்ணில் ஹெமடைட் (Hematite) எனப்படும் துருவின் கனிம வடிவம் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்து உள்ளனர். நிலவு, நாம் நினைத்தது போலச் "செயலற்றது" (inert) அல்ல என்பதை இந்த கண்டுபிடிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த ஆச்சரியமூட்டும் வேதியியல் மாற்றம் நிலவில் நிகழக் காரணம் என்ன? புதிய ஆய்வகச் சோதனை மற்றும் செயற்கைக்கோள் ஆய்வுகள் வினோதத் தொடர்பை வெளிப்படுத்துகின்றன. அந்தத் தொடர்புதான் நம்முடைய பூமி.
பூமியின் மேல் வளிமண்டலத்திலிருந்து தப்பிச் செல்லும் ஆக்ஸிஜன் அயனிகள் (Oxygen Ions), அதாவது, பூமியின் காந்தப் பகுதியில் (magnetotail) பாயும் பூமி காற்றுதான் நிலவில் இந்த ஆக்ஸிஜனேற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆய்வகத்தில் நிலவு சூழலை உருவாக்கிய விஞ்ஞானிகள், திரவ நீர் இல்லாத நிலையிலும், பூமியின் காற்றைப் போலவே ஆக்ஸிஜன் அயனிகளைச் செலுத்தியபோது, இரும்புத் தாது எளிதாக துருவாக மாறியதைக் கண்டனர்.
பொதுவாக, சூரியனிலிருந்து வரும் காற்றில் உள்ள ஹைட்ரஜன் வாயு, இரும்பின் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுத்து, துருவை உலோகமாக மாற்றும் சக்தி கொண்டது. ஆனால், ஆய்வில் கண்டறியப்பட்டபடி, சூரியக் காற்றில் உள்ள ஹைட்ரஜனின் ஆற்றல் குறைவாக இருப்பதால், அது துருப்பிடிப்பதைத் தடுக்க முடியாமல் போய்விடுகிறது.
நிலவில் துரு எங்கே இருக்கிறது என்பதிலும் சுவாரசியமான விஷயம் ஒளிந்துள்ளது. அது பெரும்பாலும் நிலவின் துருவங்களை நோக்கியும், நம் பூமியை நோக்கி உள்ள நிலவின் அருகில் உள்ள பக்கத்திலும்தான் குவிந்துள்ளது. இதற்குக் காரணம், ஒவ்வொரு மாதமும் நிலவு பூமியின் காந்தப் பகுதி வழியாகக் கடந்து செல்லும்போது, பூமி காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் நிலவின் மேற்பரப்பைச் சென்று சேர்கிறது. அதே சமயம், துருப்பிடிப்பதைத் தடுக்கும் சூரியக் காற்றில் ஹைட்ரஜன் நேரடியாக நிலவை அடையாமல், பூமியின் காந்தக் கவசத்தால் (magnetic shielding) தடுக்கப்படுகிறது.
இந்த இடைப்பட்ட பாதுகாப்பு, ஆக்ஸிஜனேற்றம் வெற்றிபெற உதவுகிறது. இந்தியாவின் சந்திரயான்-1, நாசாவின் LRO போன்ற விண்கலன்களின் அவதானிப்புகளும், இந்த இடங்களில் பூமி காற்று மற்றும் குறைந்த ஹைட்ரஜன் கலப்பால் துரு உருவாகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.