உலகின் 7 அதிசயங்களில் எகிப்து பிரமிடுகளும் ஒன்று. அதில் உள்ள கிசா கிரேட் பிரமிடு கட்டமைப்புக்குள் அதன் பிரதான நுழைவாயிலுக்கு மேலே ஒரு மூடப்பட்ட ரகசிய அறை போன்ற பகுதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு தொல்லியல் துறை அதிகாரிகள் முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை அந்த அறையைத் திறந்து உள்ளனர்.
நவீன ஸ்கேனிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி இந்த அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அறை 9 மீட்டர் (கிட்டத்தட்ட 30 அடி) நீளம் மற்றும் 2 மீட்டர் (6 அடிக்கு மேல்) அகலம் கொண்டதாக உள்ளது. , பிரமிட்டின் பிரதான நுழைவாயிலுக்கு மேலே இந்த அறை அமைந்துள்ளது. வெளியில் இருந்து யாரும் அணுக முடியாத வகையில் இந்த அறை கட்டப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு குஃபு பிரமிடுக்குள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு அறையை கண்டுபிடித்துள்ளனர். அது 30 மீட்டர் அல்லது சுமார் 98 அடி கொண்டதாக உள்ளது.
எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜாஹி ஹவாஸ் மற்றும் நாட்டின் சுற்றுலா அமைச்சர் அகமது ஈசா ஆகியோர் இந்த அறை குறித்தான அறிவிப்பை வெளியிட்டு என்டோஸ்கோபி முறையில் எடுக்கப்பட்ட அந்த அறையின் போட்டோ, வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில், உள்ளே ஒரு காலியான தாழ்வாரம் போன்ற அமைப்பு (ஆங்கிலத்தில் காரிடார்) இருப்பதும், அதன் கூரை வளைவான கற்களால் ஆகியிருப்பதும், அதன் பக்கச் சுவர்கள் கரடுமுரடான கற்களால் பின்னிப் பின்னி உருவாக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
மேலும் இந்த ரகசிய அறை குறித்தான ஸ்கேன் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/