எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் கடந்த ஆறு மாதங்களில் 25,000க்கும் மேற்பட்ட மோதல்களைத் தவிர்க்கும் சூழ்ச்சிகளைச் செய்து விண்வெளியில் பெரும் விபத்துகளைத் தடுத்துள்ளன.
ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக் கோள் இணையத் தொகுப்பான ஸ்டார்லிங்க், உலகளவில் அதிவேக, குறைந்த தாமதமான இணையத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே 4,200 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்ட நிலையில், மொத்தம் 42,000 செயற்கைக்கோள்களை சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன.
டிசம்பர் 1, 2022 மற்றும் மே 31, 2023-க்கு இடையில் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் சாத்தியமான மோதல்களைத் தவிர்ப்பதற்காக 25,000க்கும் மேற்பட்ட சூழ்ச்சிகளை மேற்கொண்டு விபத்தை தடுத்துள்ளன. விண்வெளி குப்பைகள், பிற விண்வெளி சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க 25,000க்கும் மேற்பட்ட சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக space.com இன் அறிக்கை வெளிப்படுத்துகிறது.
2019-ல் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ஏவப்பட்டதிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட விபத்துகளைத் தவிர்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மோதல் தவிர்ப்பு சூழ்ச்சிகள் முக்கியமானவை என்றாலும், சுற்றுப்பாதையில் அதிகரித்து வரும் விண்வெளி குப்பைகளின் எண்ணிக்கை இந்த மோதல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த அபாயங்களைக் குறைக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை தீவிரமாக உருவாக்கி வருகின்றனர்.
மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் தோராயமாக 260 கிலோகிராம் எடை கொண்டது. 40-50 செயற்கைக்கோள்களின் தொகுப்பாக பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“