இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4 ஆயிரம் கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். எடை குறைவான செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்ப பல நாடுகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், எடை குறைவான செயற்கைக்கோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்த இந்தியா முடிவு செய்தது. இதற்காக எஸ்எஸ்எல்வி (Small Satellite Launch Vehicle - SSLV) எனும் ராக்கெட்டை இஸ்ரோ புதிதாக வடிவமைத்தது. இதன் மூலம் எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் மூலம் இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ ), ஆசாதிசாட் ஆகிய 2 செயற்கைக்கோள்களை இஸ்ரோ நேற்று விண்ணில் செலுத்தியது. இஓஎஸ்-02 செயற்கைக்கோள் 137 கிலோ எடையும், ஆசாதிசாட் 8 கிலோ எடையும் கொண்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் நேற்று காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி ராக்கெட் 3 நிலைகளை வெற்றிகரமாக கடந்தது. ஆனால் சில நிமிடங்களில் சிக்கல் துண்டிக்கப்பட்டு, தகவல் இழப்பு ஏற்பட்டது.
செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தத்தில் தவறு நடந்தது கண்டறியப்பட்டது. இஒஎஸ்-02, ஆசாதிசாட் செயற்கைக்கோள்களை தரையில் இருந்து 356 கி.மீ உயரமுள்ள புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்குமாறாக, புவியில் இருந்து குறைந்தபட்சம் 76 கி.மீ தூரமும், அதிகபட்சம் 356 கி.மீ தொலைவும் கொண்ட நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. தவறான பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதால் எஸ்எஸ்எல்வி-டி1 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்தது.
இந்தநிலையில், எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் (எஸ்எஸ்எல்வி-டி2) பயன்படுத்தி அமெரிக்க நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஸ்பேஸ் ஃபிளைட் இன்க், கடந்த ஆகஸ்ட் 8, 2019 அன்று, இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்தது. அதில் எஸ்எஸ்எல்வி-டி2 மூலம் அமெரிக்க நிறுவனத்தின்செயற்கைகோளை விண்ணிற்கு அனுப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது, எஸ்எஸ்எல்வி-டி1 திட்டம் தோல்வியடைந்ததால், அதில் ஏற்பட்ட தவறுகளை கண்டறிந்து, அடுத்த கட்ட பணிகள் தொடங்க தாமதம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.