/indian-express-tamil/media/media_files/2025/11/01/fire-ant-2025-11-01-15-34-30.jpg)
அதிபயங்கர வேட்டைக்கார தீயெறும்புகள்... ஒருமுறை கடித்தால் தீப்புண் போல வலிக்கும்!
சாதாரணமாகத் தெரியும் ஒரு சிறிய எறும்பு, எவ்வளவு ஆபத்தானதாகவும், அதே சமயம் எவ்வளவு அற்புதமான பொறியியல் மேதையாகவும் இருக்க முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம் தான் தீயெறும்பு (Fire Ant). இந்தச் சிறிய உயிரினம் ஏன் "நெருப்பு" என்ற பெயரைப் பெற்றது? அதன் வியக்கவைக்கும் ரகசியங்கள் இதோ!
தீயெறும்புகள் ஏன் இந்தப் பெயரைப் பெற்றன? காரணம் அதன் நிறம் அல்ல (அவை பொதுவாக சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்), மாறாக அதன் கொட்டும் குணம். மற்ற எறும்புகள் கடித்து, அமிலத்தைத் தெளிக்கும் நிலையில், தீயெறும்புகள் முதலில் இலக்கைப் பிடிக்கக் கடித்துவிட்டு, பிறகு வயிற்றில் உள்ள விஷம் ஊசியால் (Stinger) கொட்டுகின்றன. இந்த விஷம், மனிதர்களுக்குத் தீப்புண் ஏற்பட்டது போன்ற கடுமையான எரியும் வலியை (Burning Pain) ஏற்படுத்தும். இது 'சோலெனோப்சின்' (Solenopsin) எனப்படும் நச்சு ஆல்கலாய்டு ஆகும். இந்தக் கொட்டு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தான விளைவுகளைக் கூட ஏற்படுத்தலாம்.
நிலத்தின் மேற்பரப்பில் நீங்கள் பார்க்கும் எறும்புப் புற்று வெறும் ஆரம்பம் மட்டுமே. அதன் உண்மையான அதிசயம் மண்ணுக்கு அடியில் உள்ளது. தீயெறும்புகளின் புற்றுகள் பூமிக்குள் 20 அடிக்கும் (6 மீ.) மேல் ஆழமாகச் செல்லக் கூடியவை. மேலும், இவை அனைத்து திசைகளிலும் 8 அடிக்கு மேல் பக்கவாட்டுச் சுரங்கங்களையும் அமைத்து, ஒரு முழு நகரத்தையே பூமிக்கு அடியில் உருவாக்குகின்றன. அவற்றின் புற்றுகளில் வெளிப்படையாக உள்ளே செல்லும் அல்லது வெளியே வரும் துளைகள் அதிகம் இருக்காது. வெறுமனே ஒரு குவிந்த மண்மேடு போல் காணப்படும்.
தீயெறும்புகளின் மிக அற்புதமான உயிர் பிழைக்கும் தந்திரம் இதுதான். வெள்ளம் வரும்போது அல்லது அவற்றின் புற்றை நீர் சூழ்ந்து கொள்ளும்போது, ஆயிரக்கணக்கான வேலைக்கார எறும்புகள் ஒன்றோடொன்று கைகோர்த்து, உடல்களை இறுகப் பிணைத்து ஒரு மாபெரும் "படகு" (Raft) போல் மிதக்கின்றன. இந்தக் கூட்டில், ராணி எறும்பு மற்றும் அதன் முட்டைகள் நடுவில் பத்திரமாக வைக்கப்படுகின்றன. ராணி எறும்பை ஒருபோதும் தண்ணீரில் படாதவாறு இந்தக் கூட்டுப் படகு வெள்ளத்தின் மீது மிதந்து, பாதுகாப்பான உயரமான இடத்தைச் சென்றடையும். இது அவற்றின் கூட்டு முயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
எறும்பு காலனியின் அச்சாணி ராணி எறும்புதான். பொதுவாக வேலைக்கார எறும்புகள் சில வாரங்களே வாழும் நிலையில், ஒரு தீயெறும்பு ராணி எறும்பு 2 முதல் 7 ஆண்டுகள் வரை உயிர் வாழும் திறன் கொண்டது. ஒரு ராணி எறும்பு தனது வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான முட்டைகளை இடும் ஆற்றல் கொண்டது. சில காலனிகளில் ஒரே நேரத்தில் பல ராணி எறும்புகள் இருப்பதுண்டு, இது காலனியின் வேகமான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
தீயெறும்புகள் தங்கள் அளவை விட அதிக பலம் கொண்டவை மற்றும் இரக்கமற்ற வேட்டைக்காரர்கள். ஒரு தீயெறும்பு அதன் சொந்த எடையைப் போல 20 மடங்கு அதிக எடையைத் தூக்கக்கூடியது. அவை சிறிய பூச்சிகள், சிலந்திகள், தவளைகள் மற்றும் சிறிய விலங்குகள் மீது கூட்டமாகத் தாக்குதல் நடத்தி, கொட்டிக் கொன்றுவிடும் திறன் கொண்டவை. பயிர்களின் வேர்களைத் தாக்கி சேதப்படுத்துவதிலும் இவற்றுக்குப் பங்கு உண்டு. ஒரு புற்றை நீங்க தொந்தரவு செய்தால், ஆயிரக்கணக்கான எறும்புகள் ஒரே நேரத்தில் எச்சரிக்கை இரசாயனத்தை வெளியிட்டு, உங்க மீது ஏறி, அனைத்தும் ஒத்திசைவுடன் ஒரே நேரத்தில் கொட்டத் தொடங்கும். இதுவே அதன் மிக ஆபத்தான தாக்குதல் உத்தி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us