மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். அபார்ட் மிஷன் எனப்படும் விண்கலத்தில் இருந்து வீரர்கள் வெளியேறும் திட்டம் ஆகஸ்ட் மாத இறுதியில் மேற்கொள்ளப்படுகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளில்லா விண்கலம் சோதனை முயற்சி செய்யப்படும் என வியாழக்கிழமை சோமநாத் தெரிவித்தார்.
பி.ஆர்.எல் இயற்பியல் ஆய்வு கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ககன்யான் திட்டத்தின் இந்த சோதனைக்கான ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் உள்ளது. க்ரூ மாட்யூல் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தின் அசெம்ப்ளி பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.
ககன்யான் திட்டத்தில், முதல் மற்றும் முக்கிய விஷயம் அபார்ட் மிஷன் ஆகும். இந்த சோதனைக்காக பிரத்யேக ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அது ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் உள்ளது. க்ரூ மாட்யூல் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தின் அசெம்பிளிகள் இப்போது தயாராகி வருகின்றன. இந்த மாத இறுதிவரை பணிகள் நடைபெறும்.
ஆகஸ்ட் இறுதியில் விண்கலத்தில் இருந்து வீரர்கள் வெளியேறும் அபார்ட் மிஷன் சோதனை செய்யப்படும். அதோடு பல்வேறு சூழ்நிலைகளில் விண்கலத்தில் இருந்து வீரர்கள் பாதுகாகாப்பாக வெளியேறும் சோதனை செய்யப்படும்.
இவற்றை தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலம் ஏவி, அதைப் பாதுகாப்பாக தரையிறக்கி தொடர்ச்சியாக சோதனை செய்யப்படும்" என சோம்நாத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“