Advertisment

மன்னார் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

நாள் ஒன்றுக்கு 40 கிலோ கடற்புல்லை மட்டுமே உட்கொள்ளும் கடல்பசு, உலகில் உள்ள அனைத்து கடல் வாழ் உயிரினங்களிலும், ஒரே ஒரு தாவர உண்ணி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரசின் இத்தகைய அறிவிப்பானது கடல்பசுக்களை மட்டுமின்றி மன்னார் வளைகுடாவின் சூழலியலையும் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Dugong Conservation Reserve , தமிழக அரசு

இந்தியாவில் முதன்முறையாக கடற்பசுக்களுக்கான பாதுகாப்பகத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Dugong Conservation Reserve: இந்திய கடற்பகுதிகளில் ஒரு காலத்தில் அதிக அளவில் காணப்பட்டு வந்த கடற்பசு (Dogong) தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. ஐ.யூ.சி.என் என்ற பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature - IUCN) சிவப்பு பட்டியலில் அழிவுறக் கூடிய உயிரினமாக (Vulnerable Species) இடம் பெற்றுள்ளது.

Advertisment

கடல்வாழ் பாலூட்டியான கடற்பசு அதிகமாக மன்னார் வளைகுடா மற்றும் பால்க் விரிகுடாவில் உள்ள கடல் புற்பரப்புகளில் வாழ்ந்து வருகிறது. தமிழக கடல் பகுதிகள் மட்டுமின்றி அந்தமான் நிக்கோர் தீவுகளிலும், குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதிகளிலும் கடற்பசு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடல் மாசடைதல் மற்றும் கடல் புற்பரப்புகள் குறைவால் அழிந்து வரும் கடற்பசுக்களை பாதுகாக்கும் பொருட்டு, இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை மன்னார் வளைகுடா மற்றும் பால்க் விரிகுடா கடற்பகுதியில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஒன்றாக இணைந்த 3 “கேலக்ஸிகள்”: சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ஹப்பிள்

அதன் அடிப்படையில் தமிழக வனத்துறையின் முதன்மை காட்டுயிர் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பது குறித்த குறிப்புரை ஒன்றை கடந்த அக்டோபர் மாதம் அரசின் பரிசீலனைக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அதில் கடல் நீர் மற்றும் கடற்கரை மத்திய அரசின் அதிகாரங்களாக இருக்கின்ற சூழலில் அங்கே காப்பகம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்பதால் காப்பகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report) தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் குறிப்புரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள கடற்கரை கிராம மக்களிடம் விரிவான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. புதுக்கோட்டையில் 18 கிராமங்கள் மற்றும் தஞ்சையில் 27 கிராமங்கள் காப்பகம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளனர். விரிவான திட்ட அறிக்கை மற்றும் கள ஆய்வுகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு. விரைவில் வரைவு அறிக்கையை மத்திய அரசு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும்.

கடற்புற்பரப்புகளை பாதுகாக்க வேண்டும்

சமீப காலங்களில் மீனவர்கள் பயன்படுத்தும் வலைகள் மூலமாக கடலில் உள்ள கடல்பாசிகள், கடல் புல் வெளிகள், பவளப்பாறை திட்டுகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளது. கடற்புற்புரப்புகள் அதிக அளவில் காணாமல் போய்விட்டது. நாள் ஒன்றுக்கு 40 கிலோ கடற்புல்லை உணவாக உட்கொள்ளும் கடல்பசு, உலகில் உள்ள அனைத்து கடல் வாழ் உயிரினங்களிலும், ஒரே ஒரு தாவர உண்ணி என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இத்தகைய அறிவிப்பானது கடல்பசுக்களை மட்டுமின்றி மன்னார் வளைகுடாவின் சூழலியலையும் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

publive-image

மன்னார் வளைக்குடா உயிர்க்கோளம்

675 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது மன்னார் வளைகுடா மற்றும் பால்க் விரிகுடா கடற்கரை. பவளப்பாறைகள், பாறைகளை அதிகம் கொண்ட கடற்கரைகள், கழிமுகங்கள், அலையாத்திக் காடுகள், கடற்புற்பரப்புகள் என்று தனித்துவமான, அழகிய, சூழலியலை கொண்டுள்ளது இந்த பகுதி. பவளப்பாறைகள், திமிங்கலங்கள், டால்பின்கள், ஆமைகள் என்று 4233 உயிரினங்கள் மன்னார் வளைகுடாவை சார்ந்துள்ளன.

இத்தகைய உயிர்க்கோளத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு தற்போது 2 கடற்படை ரோந்து அணியை (Marine Elite Force) அறிவித்துள்ளது. கடல் சூழலியலில் சேதத்தை ஏற்படுத்தும் குற்றங்களை தடுக்கவும், சட்டத்திற்கு புறம்பாக விலங்குகள் வேட்டையாடப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பதை தடுக்கவும், கடத்தலை குறைக்கவும் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் . இதற்காக தமிழக அரசு ரூ. 1.09 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது என்று தமிழக சுற்றுச்சூழல் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இந்த கடற்படை ரோந்து பணிக்காக இரண்டு ஆழ் கடல் கப்பல்கள் இயக்கப்படும். இரண்டு படைகளிலும் 5 கண்காணிப்பாளர்கள் (Marine Watchers) பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Environment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment