தென் துருவத்திற்கு அருகில், சந்திரயான் -3 கருவிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் தகவல்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஆழமாக செல்லச் செல்ல வெப்பநிலை வேகமாகக் குறைகிறது என்று முதல் ஆய்வின் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
தெர்மோபிசிகல் ஆய்வு (Chandra's Surface Thermophysical Experiment) அல்லது ChaSTE கருவி நிலவு மேற்பரப்பு மண்ணின் வெப்ப நிலையை ஆய்வு செய்தது. சந்திரயான்-3 லேண்டரில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலில் இருந்து 10 செ.மீ ஆழத்துக்கு துளையிட்டு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மேற்பரப்பிலிருந்து சுமார் 10 செ.மீ கீழே, வெப்பநிலை கிட்டத்தட்ட -10 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது. இது நிலவின் மேற்பரப்பில் சுமார் 45 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு சென்டிமீட்டரில் வெப்ப நிலையை அறியும் வகையில் அதில் 10 வெப்பநிலை உணரிகள் பொருத்தப்பட்டிருந்தன. நிலவின் தென் துருவத்தில் இதுபோன்று மணல்பரப்பின் மீது வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்யப்படுவது இதுவே முதன்முறை ஆகும். இது குறித்து விரிவான ஆய்வு செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் தொகுதி 4 கருவிகளைக் கொண்டுள்ளது. ரோவரில் 2 கருவிகள் உள்ளன. நிலவின் ஆர்பிட்டர் பகுதியில் உள்ள உந்துவிசை தொகுதியிலும் 1 கருவி பொருத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”