/indian-express-tamil/media/media_files/2025/10/05/biocomputers-2025-10-05-15-34-58.jpg)
உயிருள்ள செல்களால் இயங்கும் பயோகம்ப்யூட்டர்கள்: சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
சக்திவாய்ந்த கணினிகளை இயக்க அதிகப்படியான மின்சாரம் தேவைப்படும் இக்காலத்தில், சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறார்கள். அதுதான்: உயிருள்ள செல்களால் உருவாக்கப்பட்ட பயோகம்ப்யூட்டர்கள் (Biocomputers)! காலத்தில் அறிவியல் புனைகதைகளில் மட்டுமே பார்த்த இந்த தொழில்நுட்பம், இப்போது நிஜமாகி வருகிறது.
மனித மூளையின் செயல்பாடுகளைப் போலவே, ஆனால் மிகக் குறைந்த ஆற்றலை மட்டுமே பயன்படுத்தி, ஏ.ஐ. வேலைகளைச் செய்யக்கூடிய உயிருள்ள 'சர்வர்களை' உருவாக்குவதே இந்த விஞ்ஞானிகளின் இலக்கு. நீங்க கம்ப்யூட்டர் மொழியில் கேள்விப்பட்ட 'ஹார்டுவேர்', 'சாஃப்ட்வேர்' போலவே, உயிரியல் தளத்தில் இயங்கும் இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு 'வெட்வேர்' என்று பெயரிட்டுள்ளனர்.
இத்துறையின் முன்னணி ஆய்வாளரான ஃபைனல்ஸ்பார்க் ஆய்வகத்தின் ஃப்ரெட் ஜோர்டான் இதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார். "நாம் ஒரு நியூரானை (நரம்பு செல்) சிறிய இயந்திரம் போலப் பயன்படுத்தப் போகிறோம் என்று சொல்லும்போதே, அது நம்முடைய சொந்த மூளையின் மீது ஒரு புதிய பார்வையைத் தருகிறது. 'மனிதன் என்றால் என்ன?' என்ற கேள்வியைக்கூட இது எழுப்புகிறது," என்கிறார் அவர்.
இந்த அசுரப் பணியின் ஆரம்பம் மிகவும் எளிமையானது. முதலில், மனித தோல் செல்களிலிருந்து ஸ்டெம் செல்கள் (மூலச் செல்கள்) பெறப்படுகின்றன. பின்னர், இந்தக் கலங்கள் வளர்க்கப்பட்டு, சிறிய மூளை போன்ற கோளங்களாக (Brain-like Spheres) உருவாக்கப்படுகின்றன. இவற்றுக்கு ஆர்கனாய்டுகள் என்று பெயர். இவை மனித மூளையைப் போல சிக்கலானவை இல்லாவிட்டாலும், அதன் அடிப்படை உயிரியல் கூறுகளைக் கொண்டவை.
பல மாத உழைப்புக்கு பின், இந்த உயிருள்ள குட்டி மூளைகள் மின்முனைகளுடன் (Electrodes) இணைக்கப்பட்டு, எளிய கீபோர்டு கட்டளைகளுக்கு பதிலளிக்கப் பயிற்சி அளிக்கப்படுகின்றன. நீங்க ஒரு கட்டளையை உள்ளீடாக (Input) கொடுத்தால், ஆர்கனாய்டு ஒரு சிறிய மின்சாரத் துடிப்பை (Electrical Spike) வெளியிடுகிறது. இது கம்ப்யூட்டர் திரையில் ஒரு செயல்பாட்டுத் தடயத்தைக் காட்டுகிறது. ஆம், உயிருள்ள ஒரு அமைப்பு தரவை அனுப்பவும் பெறவும் முடிகிறது. இந்த உயிருள்ள நியூரல் அமைப்புகளின் கற்றல் திறனை மேலும் வலுப்படுத்துவதே ஆராய்ச்சியாளர்களின் அடுத்த சவால்.
"இந்த இறுதி இலக்கு ஏ.ஐ இலக்கைப் போன்றதுதான்," என்று ஜோர்டான் விளக்குகிறார். "நீங்க உள்ளீடாக பூனையின் படத்தை கொடுக்கிறீர்கள் என்றால், வெளியீடாக 'அது ஒரு பூனை' என்று சரியாகச் சொல்ல வேண்டும். இதைச் செய்ய நம்முடைய ஆர்கனாய்டுகளுக்குப் பயிற்சி அளிக்கிறோம்." உயிரியலும், கணினித் தொழில்நுட்பமும் கை கோக்கும் இந்த வெட்வேர் புரட்சி, எதிர்காலத்தில் நாம் தரவுகளைச் சேகரிக்கும், செயல்படுத்துவோம் மற்றும் புரிந்துகொள்ளும் விதத்தை முற்றிலுமாக மாற்றியமைக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.