இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய கடற்படை உடன் இணைந்து ககன்யான் பணிக்கான இரண்டாம் கட்ட மீட்பு சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஜூலை 20-ம் தேதி தொடங்கிய தரையிறங்கும் சோதனை முயற்சிகள் வெற்றிகரமாக மேற்கொண்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான பணிகள், தொடக்க கட்ட சோதனைகளை செய்து வருகிறது.
அந்த வகையில் 2-வது கட்டமாக தரையிறங்கும் சோதனை நடத்தப்பட்டது. அதாவது விண்வெளிக்கு சென்றுவிட்டு வீரர்களுடன் கடலில் இறங்கும் விண்கலத்தை பத்திரமாக மீட்பது தொடர்பான ஒத்திகை நடந்தது. கடற்படையுடன் இணைந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் இந்த சோதனையை இஸ்ரோ நடத்தியது. இதில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டம்மி விண்கலத்தை கடலில் இறக்கச்செய்து பின்னர் அதை கடற்படை வீரர்கள் மீட்டனர்.
இரண்டாம் கட்ட மீட்பு சோதனைகளின் வெற்றிகரமான தொடக்கமானது ககன்யான் பணியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளது. இது இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு முயற்சிகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், விண்வெளி ஆய்வில் அதன் திறன்களை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று இஸ்ரோ கூறியுள்ளது.
மேலும் இந்த சோதனையின் மூலம் ககன்யான் திட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதாகவும் விரைவில் ஆளில்லா விண்கலன் அனுப்பி சோதனை செய்யப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“