நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடுங்கள் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஹர் கர் திரங்கா (Har Ghar Tiranga)பிரச்சாரத்தின் கீழ் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுங்கள் என அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தநிலையில், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மூலம் பூமியில் இருந்து 30 கிலோமீட்டர் உயரத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. அதாவது பூமியில் இருந்து 1.06 லட்சம் அடி உயரத்தில் வாயு நிரப்பபட்ட பலூன் மூலம் தேசியக் கொடி கொண்டு செல்லப்பட்டு பறக்கவிடப்பட்டது.
இந்தியா 75 ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடும் வேளையில் சர்வதேச நாடுகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி தனது வீடியோ செய்தியில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 நிறைவடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல், நாசாவில் பணிபுரியும் இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா சாரியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். "நாசா மற்றும் இஸ்ரோ இடையேயான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிகள் வளர்ந்து வந்த நாட்களில் நாசா இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றியது. இந்த கூட்டுப் பணி இன்றும் தொடர்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இந்த அமைப்பு அண்மையில் ஆஸாதிசாட் (AzadiSAT) என்ற செயற்கைக்கோளை உருவாக்கியது. 75ஆவது ஆண்டு சுதந்திரத்தையொட்டி இந்தியா முழுவதிலும் இருந்து 750 மாணவிகள் சேர்ந்து இந்த செயற்கைக்கோளை உருவாக்கினர்.
எஸ்எஸ்எல்வி- 1 ராக்கெட் மூலம் இஸ்ரோ இந்த செயற்கைக்கோள் மற்றும் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. ஆனால் திட்டமிட்டபடி ராக்கெட் செயற்கைக்கோளை அதன் பாதையில் நிலைநிறுத்தாததால், இந்த திட்டம் தோல்வியடைந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil