இன்றைய தினத்தில் நம் அனைவரும் வெப்ப நிலை உயர்வால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றோம். உலக நாடுகளைப் போன்றே இந்தியாவும் இந்த தாக்கத்தில் இருந்து மாறுபட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கார்பன் வெளியிட்டை சமநிலையாக்குவது அதில் ஒரு முக்கிய இலக்காகும். காடுகள் இயற்கையாகவே கார்பன் டை ஆக்ஸைடை கிரகித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதால் காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் நீண்ட நாள் வேண்டுகோள்கள் ஆகும். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு தமிழகத்தின் மொத்தப்பரப்பில் 33% காடுகள் பரப்பு அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் வெளியிட்டிருந்த தமிழக நிதி நிலை அறிக்கையில் ரூ. 850 கோடி மதிப்பிலான திட்டங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தது.
மழைக்காடுகளும் களைச்செடிகளும்
நீலகிரி, இன்று நம்முடைய நீர் வள ஆதாரங்களில் மிக முக்கியமான பங்கெடுப்பை கொண்டுள்ளது. ஆனாலும் நீர் உற்பத்தியாகும் சோலைக்காடுகள் – புல்பரப்பு சுற்றுச்சூழலில் (Shola forests – Grass land ecosystem) அளவுக்கு அதிகமாக காணப்படும் வெளிநாட்டு மரங்கள் மற்றும் களைச்செடிகள் மண்ணின் தன்மையை மாற்றுவதோடு அந்த சுற்றுச்சூழலுக்கும் தீங்கை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் பொருட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 27, 2014 அன்றே யூக்கலிப்டஸ் மறூம் வாட்டல் உள்ளிட்ட களைச் செடிகள் மற்றும் வெளிநாட்டு மரங்களை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் ஆர். சுதாகர் மற்றும் வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஆணை பிறப்பித்தது. ஆனாலும் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது வேதனை அளிக்கும் ஒன்றாகும். களைச்செடிகளை நீக்குவதோடு மட்டுமின்றி அழியும் நிலையில் இருக்கும் சோலைக்காடுகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தது. இன்று பல இடங்களில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தற்போது இத்தகைய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரிக்கே உரித்தான தாவரங்களை வளர்க்கும் ஆராய்ச்சியாளர் காட்வின் வசந்த்!
செழுமையான காடுகளும் அதற்கான அறிகுறிகளும்
ஒரு காட்டில் யானைகளும், புலிகளும் இருப்பது அந்த காடு வளம் கொண்டதாக இருப்பதற்கான அறிகுறிகள். பல்வேறு இடங்களில் மேம்பாட்டு திட்டங்கள் என்று உருவாக்கப்படும் திட்டங்கள், அல்லது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்கள் இத்தகைய உயிரனங்களின் வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது. சமீபத்தில் கோவையில் தண்டவாளத்தில் அடிபட்டு மூன்று யானைகள் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. யானைகள் வலசையின் போது எத்தகைய மனித மற்றும் மேம்பாட்டு தொந்தரவுகளை அப்பகுதியில் தடுக்கும் பொருட்டு, பிப்ரவரி மாதம் 3ம் தேதி அன்று தமிழகத்தின் எட்டிமடை ரயில் நிலையம் மற்றும் கேரளாவின் வாளையாறு ரயில் நிலையத்திற்கு இடையே இரண்டு பாதாள வழிகளை, யானைகள் பயன்படுத்தும் வகையில் உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து ரயில்வே வாரியம் ரூ. 7.49 கோடியை இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது. யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரங்களை அமைப்பதோடு, பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது உயர் நீதிமன்றம்.
தனியார் ரெசார்ட்டுகள், முறையான அனுமதியின்றி கட்டப்பட்டு செயல்பட்டு வரும் கோவில்கள், அறிவியல் உண்மைகள் அடிப்படையில் செயல்படுத்தப்படாத திட்டங்கள் போன்றவை கோவை மட்டுமின்றி தமிழகத்தின் இதர பகுதிகளிலும் யானை மனித மோதல்களுக்கு வழிவகுக்கின்றன. சட்டத்திற்கு புறம்பாக கோவையில் செயல்பட்டு வந்த செங்கல் குவாரிகள் மூடப்பட்ட பிறகு அங்கே மனித – மிருக மோதல்களுக்கு இடமே இல்லாமல் போனது ஆச்சரியம் அளிக்கும் உண்மையாக இருக்கிறது. போதுமான அளவில் மனிதர்களுக்கு காடுகள் மற்றும் வனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு தவறிவிட்டதே இத்தகைய போக்கிற்கு காரணமாக அமைந்துள்ளது. மாறாக ஒரு சில இடங்களில் தமிழக வனத்துறை, சுற்றுலாச் செல்லும் பயணிகளுக்கு அந்த இடத்தின் முக்கியத்துவம் அங்கே வாழும் பறவைகள், விலங்குகளின் முக்கியத்துவம் குறித்தும் சிறப்பு வகுப்புகள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
தடாகம் பள்ளத்தாக்கு ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?
ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
நீலகிரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை கொண்டு வரப்பட்டது. ஆனாலும் சுற்றுலாத் தளமான அப்பகுதியில் ப்ளாஸ்டிக் பைகளுக்கான முழுமையான தடையை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருப்பதைக் காட்டுகிறது இன்றைய சூழல். வனம் என்பது வெறும் காடு மட்டுமின்றி காட்டில் வாழும் உயிரினங்கள் தொடர்பானதும் கூட. ஏதோ ஓரிடத்தில் வீசப்படும் ப்ளாஸ்டிக் பை, குப்பை, கழிவுகள் வனவிலங்குகளுக்கு உணவாகிறது. இதனை உட்கொண்ட விலங்குகள் செரிமானக் கோளாறுகள் காரணமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. சமீப காலமாக நீலகிரி மலைப்பகுதியில் உயிரிழந்த காட்டு எருமைகளுக்கு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில் ப்ளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது திண்டுக்கல் மற்றும் கோவையில் இருந்து கொடைக்கானல் மற்றும் உதகைக்கு செல்லும் வாகனங்கள் முறையே கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிறகு அவை அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உயிரினங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்
யானைகளுக்கும் புலிகளுக்குமே இதுவரை அதிக அளவு மத்திய அரசும் மாநில அரசுகளும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. நீலகிரி லாங்கூர், நீலகிரி சோலைக்கிளிகள், நீலகிரி மார்டின், வரையாடு போன்றவை உலகின் வேறெந்த பகுதிகளிலும் இல்லாத விலங்கினங்கள். காடுகளின் பரப்பு குறைதல் மற்றும் மனித நடவடிக்கைகளால் இவற்றின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இவற்றை பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது தமிழக வனங்கள் பல்லுயிர் மண்டலமாக பல ஆண்டுகள் நிலைத்திருக்கும்.
எவையெல்லாம் காடுகள்?
பெரிய பெரிய மரங்களைக் கொண்டிருக்கும் பகுதிகள் மட்டும் காடாகாது. நீலகிரியின் மசினக்குடியில் வறண்ட சூழலில் வாழும் காடுகள் காணப்படுகிறது. அவை கோத்தகிரி, குன்னூர் பகுதியில் காணப்படும் பசுமை மாறாக்காடுகள் போன்று இருப்பதில்லை. ஆனால் அவையும் காடுகள் தான்.
மரங்களை அதிகமாக கொண்டிருக்கும் காடுகளைப் போன்றே இதர சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஈரநிலங்கள், அலையாத்திக் காடுகள், புல்வெளி மண்டலங்கள் போன்றவையும் உயிரினங்கள் வளர தேவையான தகவமைப்பைக் கொண்டுள்ளன. வெப்பநிலை உயர்வால் குறைவான உயரங்களில் உள்ள காடுகளில் வாழும் உயிரினங்கள், அதிகமான உயரங்களில் உள்ள காடுகளை நோக்கி நகருகின்றன. எனவே ஒவ்வொரு உயிர் சூழலும் இங்கே முக்கியத்துவம் கொண்டவை. அதனை காக்கும் பொருட்டு தனித்தனி திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட வேண்டும்.

கேள்விக்குறியாகும் பழங்குடி மக்கள் – காடுகள் இடையேயான தொடர்பு
மூங்கில் என்பது தன்னுடைய ஆயுளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூத்து தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும். அதனை மரமாக பட்டியலிட்டு, அதனை அணுக பழங்குடிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு கூடலூரில் இருந்து உதகை செல்லும் வழியில் ஆயிர கணக்கான மூங்கில் மரங்கள் பூத்து தன்னுடைய வாழ்வை முடிக்க துவங்கியிருந்தன். மூங்கில் குருத்து யானைகளுக்கு நல்ல உணவு. மூங்கில்கள் மூப்படைந்தால் யானைகள் உணவுக்கு என்ன செய்யும்?
பல நூறு ஆண்டுகளாக வனத்தில் வனவிலங்குகளும் மனிதர்களும் வசித்து வருகின்றனர். வனத்தில் வாழும் மக்கள், காடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர் எனவே அவர்களை காடுகளை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற மனநிலைமை “திடீர் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு” சற்று அதிகமாகவே உள்ளது. தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக காடுகளையே சார்ந்திருக்கும் பழங்குடி மக்கள் சிறு வன மகசூல்களுக்காக காடுகளுக்கு செல்லவும் கூட ”கிடுக்குப்பிடி” அதிகரித்து வருகிறது. தங்களின் வழிபாடு, கலாச்சாரம், மற்றும் உணவு தேவைக்காக காடுகளை நம்பி வாழ்ந்த மக்கள் காடுகளில் இருக்கின்ற போதும் கூட காடுகள் காடுகளாக இருக்கும். அவர்களும் அங்கிருந்து வெளியேற்றப்படும் போது அந்த காட்டில் எந்த பக்கம் யானை செல்லும், எப்போது மான்கள் உணவுக்காக வரும், எங்கே சிறுகுட்டை இருக்கிறது, எந்த செடியில் எந்த மருத்துவக் குணம் இருக்கிறது என்பதைக் கூட காட்டை கண்டிராத, காட்டை சாராத “நிறுவனக் கல்வியை” மட்டுமே பெற்றிருக்கும் நபர்கள் வந்து கூறும் நிலை நாளை உருவாகலாம்.
வனத்தை சார்ந்து வாழும் மக்களின் அறிவின் அடிப்படையிலும், நீண்ட, ஆழமான ஆராய்ச்சி அடிப்படையிலும் வனங்கள் காக்கப்பட வேண்டும் என்ற திசையில் தமிழக அரசு பயணிக்கும் பட்சத்தில் 33% வனபரப்பு என்பது சாத்தியமான ஒன்றாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil