சென்னையில் நேற்றிரவு வானில் தென்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை வெறும் கண்களால் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
மணிக்கு சுமார் 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை சுற்றிவரும் இந்த சர்வதேச விண்வெளி மையம் தினமும் பூமியை 15.5 முறை வலம் வருகிறது. அவ்வாறு விண்வெளி மையம் சுற்றி வருகையில் சில நேரங்களில் பூமிக்கு மிக அருகில் வருவதுண்டு. அப்போது அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
இந்நிலையில் சென்னையில் இருந்து மிக அருகில் சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்து செல்லும் என்று நாசா அறிவித்திருந்தது.
அதன்படி நேற்றிரவு சென்னையில் தென் மேற்கு திசையில் இரவு 7.09 முதல் 7.16 மணி வரை சுமார் 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்து செல்வதை காண முடிந்தது.
இந்த அரிய காட்சியை பொதுமக்கள், குழந்தைகள் அறிவியல் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எப்போது நமது பகுதியில் விண்வெளி மையம் தெரியும் என்பது குறித்து அறிந்து கொள்ள நாசாவின் ‘ஸ்பாட் தி ஸ்டேஷன்’ என்கிற இணையத்தளத்தை அணுகலாம்.
சூரிய ஒளி படும்போது இந்த விண்வெளி மையம் ஒளிர்வதாகவும் அதனால் மாலை அல்லது அதிகாலை நேரங்களில் தென்படுவதாகவும் நாசா குறிப்பிடுகிறது.
விண்வெளி ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட இந்த விண்வெளி மையம் 2023-ல் ஓய்வு பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“