ஐ.பி.சி.சியின் 6ம் கட்ட மதிப்பறிக்கை காலத்தின் மூன்றாவது அறிக்கை நேற்று மாலை வெளியிடப்பட்டது. தேசிய அளவிலான பங்களிப்பு மூலமாக இதுவரை கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை அடுத்த 10 ஆண்டுகளில் மேற்கொண்டாலும் கூட புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதை தடுக்க இயலாது என்று எச்சரிக்கை செய்துள்ளது பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு.
எரிபொருளில் இருந்து நேரடியாக வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 2050ம் ஆண்டு இருமடங்கு அல்லது மும்மடங்கு அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் இந்த மாற்றத்தின் விளைவாக 2100ம் ஆண்டு தொழிற்புரட்சிக்கு முந்தைய உலகத்தின் சராசரி வெப்பநிலையில் இருந்து 3.7 டிகிரி செல்சியஸ் முதல் 4.8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்கள் சந்திப்பில் உறுப்பினர்கள் கூறியது என்ன?
நேற்று ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐ.பி.சி.சி. உறுப்பினர்கள், 2010 முதல் 2019 வரையிலான காலகட்டம் உலக வரலாற்றில் அதிக அளவில் பசுமையக வாயுக்கள் வெளியேற்றப்பட்ட காலகட்டம் என்று கூறியுள்ளது. உடனடியாக தீவிரமான நடவடிக்கைகளை அனைத்து துறைகளிலும் முறையாக பின்பற்றவில்லை என்றால் 1.5 டிகிசி செல்சியஸ் வெப்பநிலை உயர்வை குறைப்பது கடினம் என்று கூறினார்கள். ஆனாலும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.
2010ம் ஆண்டு முதல் சூரிய மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கான செலவு 85% வரை குறைந்துள்ளது. உலக அளவில் கொள்கை ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ஆற்றல் செயல்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. காடுகள் அழிக்கப்படுதல் குறைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசுகள் ஆயத்தமாகி வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இப்போது நாம் எடுக்கும் முடிவுகளே வாழத் தகுந்த வருங்காலத்தை உருவாக்கும். தற்போது நம்மிடம் அனைத்தும் தயாராக உள்ளன. எப்படி வெப்பநிலை உயர்வை குறைக்கப் போகின்றோம் என்பது மட்டுமே கேள்வி என்று ஐ.பி.சி.சி. தலைவர் ஹோசூங் லீ தெரிவித்துள்ளார்.
நிலப்பயன்பாடு, கட்டிடங்கள், போக்குவரத்து, எரிசக்தி துறை, நகர்ப்புற குடியேற்றங்கள், தொழிற்சாலைகள், முதலீடு மற்றும் நிதி, சர்வதேச அமைப்புகள் ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளில் உள்ள உண்மை நிலவரம் என்ன? எத்தகைய மாற்றங்கள் தேவைப்படுகிறது என்பதையும் பட்டியலிட்டுள்ளது இந்த ஐ.பி.சி.சி. மதிப்பறிக்கை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”