இந்தியாவின் விண்வெளி சாதனைகளில் தமிழர்களின் பங்களிப்பு நீடித்து வருவதாகத் தெரிகிறது. சனிக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா-எல் 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தமிழர்களின் வரிசையை நீட்டிக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரியும் செங்கோட்டையைச் சேர்ந்த நிகர் ஷாஜி சுல்தானா (59), ஆதித்யா-எல்1 திட்டத்தின் இயக்குநராக உள்ளார், இது சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் மிஷன் ஆகும்.
இதையும் படியுங்கள்: ‘என்னால் முடிந்தால் யாராலும் முடியும்’: அரசுப் பள்ளி மாணவன் முதல் நிலவு வரை, சந்திரயான் 3 திட்ட இயக்குனரின் எழுச்சி
நிகர் ஷாஜி தனது பள்ளிப் படிப்பை செங்கோட்டை திருராமமந்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் முடித்தார். இவர் 10 ஆம் வகுப்பில் 433 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் 1008 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். பின்னர் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். தொடர்ந்து பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் மேற்படிப்பை முடித்தார்.
அதனைத் தொடர்ந்து 1987ல் இஸ்ரோவில் சேர்ந்தார். பெங்களூருவில் வசிக்கும் நிகர் ஷாஜி, பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக நாசா நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நிறுவனங்களுக்குச் சென்றுள்ளார்.
நிகர் ஷாஜியின் கணவர் பொறியாளராக வளைகுடா நாட்டில் பணிபுரிகிறார். அவரது மகன் நெதர்லாந்தில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். அவரது மகள் பெங்களூருவில் ஷாஜியுடன் தங்கி உள்ளார். நிகர் ஷாஜி குடும்ப நிகழ்ச்சிகள் நடக்கும் போதெல்லாம் செங்கோட்டைக்கு வந்துச் செல்வார்.
நிகர் ஷாஜியுடன் இந்திய விண்வெளித்துறையில் தமிழர்களின் பங்களிப்பு நீடித்துக் கொண்டே செல்கிறது. முன்னதாக சமீபத்தில் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட சந்திரயான் – 3ன் திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் இருந்தார். அதற்கு முன்னர் செய்யப்பட்ட நிலவு பயணமான சந்திரயான் –2ன் திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த வனிதா முத்தையா இருந்தார். மேலும், முதல் முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் – 1ன் திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.
மேலும், அப்துல் கலாம், சுப்பையா அருணன், சிவன் உள்ளிட்டோர் இஸ்ரோவின் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“