சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டிஎஸ்-சார்’ எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 7 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த 7 செயற்கைக் கோள்களும் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக, இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
அதனுடன், வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது.
அதன்படி சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-சார் எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்தச் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 30) காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த 'டிஎஸ்-சார்' செயற்கை கோள், டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.
352 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இது அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும்.
இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆர்கேட் (24 கிலோ), ஸ்கூப்-2(4கி), நியூலயன் (3கி), கலாசியா(3.5கி), ஆர்ப்-12 ஸ்டிரைடர்(13கி) ஆகிய 6 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன. இந்த செயற்கை கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இவை அனைத்தும் பல்வேறு விதமான தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
முன்னதாக சிங்கப்பூரைச் சேர்ந்த TeLEOS-2 செயற்கைக்கோள் ஏப்ரல் மாதம் பி.எஸ்.எல்.வி. சி.55 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“