சந்திரயான் -3 லேண்டர் மற்றும் ரோவரின் ஆயுளை நீட்டிக்கும் நம்பிக்கையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனில் பகல் நேரம் முடிவடைவதால் சனிக்கிழமையன்று, பிரக்யான் ரோவரை உறக்க நிலையில் (Hibernation mode ) வைத்தது.
இஸ்ரோ கூறுகையில், ரோவர் அதன் பணிகளை முடித்துள்ளது. இது இப்போது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் மோட்டில் மாற்றப்பட்டுள்ளது. APXS மற்றும் LIBS பேலோடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த பேலோடுகளில் இருந்து தரவுகள் லேண்டர் வழியாக பூமிக்கு அனுப்பபட்டுள்ளன என்று கூறியது.
சந்திரயான் -3 லேண்டர் மற்றும் ரோவர் ஒரு சந்திர நாள் (Lunar day) 14 பூமி நாட்கள் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், நிலவில் இரவு நேரத்தில் -120 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலை இருக்கும். இதனை தாங்கும் வகையில் சந்திரயான் -3 மின்னணு சாதனங்கள் வடிவமைக்கப்படவில்லை.
நிலவில் இரவு நேரமும் 14 நாட்கள் வரை இருக்கும். இருப்பினும் எலக்ட்ரானிக்ஸ் குறைந்த வெப்பநிலையிலும் செயலுடன் இருக்கும். நிலவில் மீண்டும் சூரிய ஒளி கிடைத்தவுடன் தானாகவே ஆற்றல் பெற்றுக் கொள்ள முடியும். உண்மையில், இது சில ஆண்டுகளுக்கு முன்பு சீன லேண்டர் மிஷன் ஒன்றில் நடந்தது.
இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் கூறுகையில், லேண்டர் மற்றும் ரோவரின் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முயற்சி செய்யும் என்றார். தொடர்ந்து, லேண்டர் மற்றும் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்படும். இதனால் அவை இரவைக் கடந்து தாங்கி நிற்கும் என்று கூறினார்.
எனினும் ரோவரில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. சோலார் பேனல் செப்டம்பர் 22, 2023 அன்று எதிர்பார்க்கப்படும் அடுத்த சூரிய உதயத்தில் ஒளியைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரிசீவர் தொடர்ந்து ஆன்-ல் வைக்கப்பட்டுள்ளது” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“