திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள மகேந்திரகிரியில் இஸ்ரா விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிக எடை கொண்ட ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை நடைபெற்றது. சோதனை வெற்றிகரமாக மேற்கொண்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்தியா எல்.வி.எம்-3 (LVM-3) திட்டத்தின் மூலம் மீண்டும் 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அதிக எடை கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் என்ஜின் சி.இ-20 (CE-20) தற்போது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான OneWeb-இன் இந்த செயற்கைக்கோள்கள் அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இஸ்ரோவின் LVM3 மூலம் ஏவப்பட உள்ளது. வணிகப் பயன்பாட்டிற்காக இந்த செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளன.
என்ஜின் செயல்திறன், உறுதிப்பாட்டை ஆய்வு செய்ய சோதனை நடத்தப்பட்டது. சோதனை தரவுகள், ஆய்வு திருப்திகரமான செயல்திறனை வெளிப்படுத்தியது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சோதனை 25 விநாடிகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வளாக இயக்குநர் பத்ரி நாராயணமூர்த்தி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் நடத்தப்பட்டது.
இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டான எல்.வி.எம்-3 (LVM-3) நான்கு டன் வகை செயற்கைக்கோளை ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் (Geosynchronous Transfer orbit) சுற்றுப்பாதையில் எடுத்து செல்லும் திறன் கொண்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil