இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான டெலியோஸ் (TeLEOS-02) செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட் மூலம் இஸ்ரோ ஏப்ரல் 22-ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. ஏப்ரல் 22-ம் தேதி (சனிக்கிழமை)
பிற்பகல் 2.19 மணிக்கு ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் இருந்து ஏவப்படுகிறது.
டெலியோஸ் செயற்கைக்கோள் 750 கிலோ எடை கொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது செயற்கை துளை ரேடார் மூலம் 1 மீட்டர் தெளிவுத்திறனில் தரவை வழங்கும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள்கள் பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் (Polar Satellite Launch Vehicle-C55) இந்தாண்டின் மூன்றாவது மிஷன் ஆகும். தற்போது வரை இஸ்ரோ 2 திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தாண்டின் தனது முதல் திட்டத்தை பதிவு செய்தது. அதைதொடர்ந்து எல்.வி.எம்-3 மூலம் வணிக செயல்பாட்டிற்கான 36 ஒன்வெப் செயற்கைக்கோளை மார்ச் மாதம் இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியது.
இந்நிலையில் இம்மாதம் பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட்டை செலுத்த தயாராகி வருகிறது. இது மற்றொரு வணிகப் பயன்பாட்டு திட்டமாகும். வணிகச் சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும் அரசின் திட்டம் வலுபெற்று வருகிறது. இது தற்போதைய 2 சதவீத விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil