குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று (ஆக.16) விண்ணில் செலுத்தப்பட்ட புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைத்த அதிநவீன இஓஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இப்போது செயற்கைக்கோள் அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து செயற்கைக்கோளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் சிறப்பாக செயல்படும்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் இரண்டாண்டுகளில் முடிவுபெறும், என்றார்.
இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது. அங்கிருந்துதான் இதுவரை இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் தன் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம்
இங்கு சுமார் 2,300 ஏக்கர் நிலம் தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“