இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பி.எஸ்.எல்.வி-சி 54 ராக்கெட் நேற்று (நவம்பர் 26) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் ஓசன்சாட்-3 செயற்கை கோள், இந்தியா-பூட்டான் இணைந்து தயாரித்த ஐ.என்.எஸ் 2பி, நானோ செயற்கை கோள்கள் உள்பட 9 செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி-சி 54 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் செலுத்ததப்பட்ட17 நிமிடங்களில் 742 கி. மீ உயரத்தில் ஓசன்சாட்-3 செயற்கைகோள் புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது என இஸ்ரோ தெரிவித்தது. மற்ற பிற செயற்கைகோள்களும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி-சி 54 திட்டம் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டினார்.
இந்நிலையில், ராக்கெட் ஏவப்பட்டதற்குப் பின் இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக இஸ்ரோவின் 2-வது ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. தடுப்பு வேலிகள், சுற்றுச் சுவர், மின்சாரம், போக்குவரத்து கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அங்குள்ள மக்களை மறுகுடியேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதன் பிறகு ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிகள் தொடங்கும். 24 மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் படி திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil