Lunar Eclipse 2022: இந்த ஆண்டின் முதல் பகுதி சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து, நாம் இப்போது 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த சந்திர கிரகணம், பூமியின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெரியும். இந்த ஆண்டு மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கிரகணம் நிகழ உள்ளது.
கிரகணத்திற்கு முன்னதாக, அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
கிரகணம் எப்போது ஏற்படும்?
2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இந்த வார இறுதியில், அதாவது மே 15 மற்றும் மே 16 ஆகிய தேதிகளில் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மே 16 ஆம் தேதி காலை 7:02 மணிக்கு கிரகணம் ஏற்பட்டு மதியம் 12:20 மணிக்கு முடிவடையும். ஆனால், இந்தியாவில் சந்திர கிரகணம் தென்படாது.
சந்திர கிரகணத்தை எப்படி பார்ப்பது
ஏதேனும் காரணத்தால் உங்கள் பகுதியில் இருந்து கிரகணத்தைப் பார்க்க முடியாவிட்டால், அதிகாரப்பூர்வ நாசா இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அதை நேரடியாகப் பார்க்கலாம். நாசா தனது சமூக ஊடக தளங்களிலும், அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பும்.
மற்ற தகவல்கள்
சந்திரனும், சூரியனும் பூமியின் நேர் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது, இதன் விளைவாக சந்திரனில் சூரிய ஒளி முற்றிலும் தடைபடுகிறது. அடிப்படையில், சந்திரன் பூமியின் நிழலில் நகரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்த ஆண்டு, சந்திர கிரகணம் பிரபலமாக அறியப்படும் 'பிளட் மூன்' நிகழ்வுகளை ஏற்படுத்தும். பிளட் மூன்' போது, சந்திரனின் மேற்பரப்பில் ஒரு சிவப்பு நிறம் தெரியும், இது நிலவுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.
கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலம்’ சூரிய ஒளியை சிதறடிப்பதால், நீண்ட அலைநீளம் கொண்ட சிவப்பு ஒளி மட்டுமே சந்திரனை நோக்கி பயணிக்கும். அப்போது 'ரேலி சிதறல்' (Rayleigh scattering) நிகழ்ந்து, நிலவில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது.
கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலத்தில் அதிக தூசி அல்லது மேகங்கள் அதிகமாக இருந்தால், சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும் என்று நாசா குறிப்பிடுகிறது.
இந்த ஆண்டு நிகழவிருக்கும் இரண்டு சந்திர கிரகணங்களில் முதல் சந்திர கிரகணம் மே 16ஆம் தேதி நிகழவுள்ளது. தொடர்ந்து நவம்பர் 8ம் தேதி, இரண்டாவது சந்திர கிரகணம் நிகழும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“