Chandra Grahanam 2022 | உலகம் முழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணத்தை காண விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆர்வமாக உள்ளார். ஏனென்றால் அடுத்த முழு சந்திர கிரகணம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ம் ஆண்டு தான் நிகழும். இந்தியாவில் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தை காண முடியும்.
சந்திர கிரகணம் நேரம்?
இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. முழு சந்திர கிரகணமானது பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி 5.12 மணி வரை நீடிக்கும். பின்னர் பகுதி அளவு சந்திர கிரகமும் 6.19 மணியளவில் நிறைவடைகிறது.
தமிழகத்தில் பார்க்க முடியுமா?
இந்தியாவில் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தை காண முடியும். இருப்பினும் கிரகணத்தின் ஆரம்ப நிலையை எந்தப் பகுதியில் இருந்தும் காண முடியாது. முழு மற்றும் பகுதி அளவு சந்திர கிரகணத்தின் நிலைகளை மட்டுமே காண முடியும். இந்த நிலைகளை கொல்கத்தா, குவாஹாட்டி, கோஹிமா, அகர்தலா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து காணலாம். சந்திர கிரகணத்தின் பிற்பகுதி மற்றும் முடியும் நிலைகளை மட்டும் இங்கிருந்து காணலாம்.
நாகலாந்தின் கோஹிமாவில் மட்டும் சந்திர கிரகணத்தின் உச்ச நிலையை மாலை 4.29 மணியளவில் காணலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் சென்னையில், மாலை 5.39 மணியளவில் சந்திர கிரகணத்தை காண முடியும். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு நகரத்தில் சந்திர கிரகணத்தின் பிற்பகுதி நிலைகளை காண முடியும்.
நேரலையில் பார்க்கலாம்
இந்தியாவில் முழு சந்திர கிரகணம் தெரியவில்லை என்றாலும் உலகின் மற்ற பகுதிகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை காணலாம். யூடியூப் வாயிலாக நேரலை செய்யப்படுகின்றன. மாலை 3 மணி அளவில் நேரலை செய்யப்படுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பார்த்துக் கொள்ளலாம்.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் உள்ள லோவெல் ஆய்வகம், மாலை 3 மணி முதல் நேரலை செய்கிறது. நிபுணர் ஜான் காம்ப்டன் மற்றும் வரலாற்று ஆசிரியர் கெவின் ஷிண்ட்லர் ஆகியோரின் வர்ணனையுடன் நேரலை செய்யப்படுகிறது.
முழு சந்திர கிரகணம் என்றால் என்ன? சிவப்பு நிறத்தில் காணப்படுவது ஏன்?
இரண்டு வகையான சந்திர கிரகணங்கள் உள்ளன – முழு மற்றும் பகுதி அளவு சந்திர கிரகணம். இரண்டுமே பூமி மற்றும் நிலவை தொடர்பு கொண்டது. பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதாவது, பூமியின் நிழல் சந்திரனை குறிப்பிட்ட நேரத்திற்கு மறைத்து கடந்து செல்கிறது.
பகுதி அளவு சந்திர கிரகணத்தின் போது, பூமியின் நிழல் சந்திரனை விழும் போது சந்திரனின் பக்கத்தில் மிகவும் இருட்டாகத் தோன்றும்.
முழு சந்திர கிரகணமானது, சூரியனும் சந்திரனும் நமது கிரகத்தின் எதிர் பக்கங்களில் இருக்கும்போது நிகழ்கிறது. சந்திரன் பூமியின் நிழலில் இருந்தாலும், சூரிய ஒளி சந்திரனை அடைகிறது. அதானல் நிலா (சந்திரன்) சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. சூரியனின் ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சென்று விழுகிறது.
முழு சந்திர கிரகணம் இன்று நிகழவிருப்பதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாத்தப்படுகிறது. 11 மணி நேரம் கோயில் மூடப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படுகிறது. கிரகணம் முடிந்த பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil