பாகன் அல்ல நீ... யானையின் ஒரு பாகம் - அசத்தும் மலசர் குறும்படம்
டாப்ஸ்லிப்பில் அமைந்துள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாம்களில் வசித்து வரும் பழங்குடி மக்கள் முன்னொரு காலத்தில் இந்த பகுதியில் இருக்கும் யானைகளை வசப்படுத்தி பழக்கி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யானைகள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது சொல்லுங்கள்… இன்று தமிழகத்தின் காடுகளில் இருந்து யானைகள் ஏதேனும் வெளியேறினால் அதனை பிடிக்க முதலில் வனத்துறைக்கு உதவ வரும் பழங்குடி மக்கள் மலசர்களாகவே இருப்பார்கள். ஆதிகாலம் தொட்டு இந்த மண்ணின் மைந்தர்களாக, இயற்கையோடும், யானைகளோடும், ஆனைமலைக் காட்டில் வாழும் நீண்ட நெடிய மரபைக் கொண்ட மலசர்கள் பற்றிய குறும்படம் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.
Advertisment
6 நிமிடங்கள் 36 நொடிகள் ஓடும் இந்த குட்டி குறும்படம் யானைகளுக்கும் மலசர் மக்களுக்கும் இடையே இருக்கும் பந்தம் குறித்து பேசுகிறது. தன்னுடைய மூதாதையர் கற்றுக் கொடுத்த காடு பற்றிய, களிறு பற்றிய அறிவு வருங்கால சந்ததியினருக்கு கடத்தப்படுமா என்ற கேள்வியுடன், அருவி, மலை, சிற்றோடையின் அழகான ரீங்காரத்தோடு நகருகிறது இந்த குறும்படம்.
டாப்ஸ்லிப்பில் அமைந்துள்ள கோழிக்கமுதி யானைகள் முகாம்களில் வசித்து வரும் பழங்குடி மக்கள் முன்னொரு காலத்தில் இந்த பகுதியில் இருக்கும் யானைகளை வசப்படுத்தி பழக்கி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறும்படம் வெளியான நிலையில், நேற்று யானைகள் முகாமில் இந்த பழங்குடி மக்களுக்கு இந்த படம் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
திரைப்பட நடிகர் நாசரின் குரலில் ஆனைமலைக் காடுகளின் நாடித் துடிப்பு படம் முழுவதும் பார்வைக்கு கிடைப்பது அனைவரையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. ஃபார்அவே ஒரிஜினல்ஸ் மற்றும் பொள்ளாச்சி பாப்பாரைஸ் மூலமாக வெளியாகும் இரண்டாவது குறும்படம் இதுவாகும். கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பு காடர் பழங்குடி மக்கள் குறித்து ஒரு படம் வெளியானது. தொடர்ந்து ஆனைமலைத் தொடரில் வசித்து வரும் பழங்குடி மக்கள் குறித்து இவர்கள் ஆவணப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil