சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பபட்ட ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் கடந்த புதன்கிழமை இரவு கூலன்ட் கசிவு ஏற்பட்டது. கிட்டதிட்ட 3 மணி நேரத்திற்கு மேல் கசிவு ஏற்பட்டது. இதனால் விண்வெளி வீரர்களின் நடைப்பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த கசிவு ஒரு சிறிய விண்கல் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்று ரஷ்ய விண்வெளி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் அன்று விண்வெளி நடைப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சரியான நேரத்தில் கசிவு கவனிக்கப்பட்டதையடுத்து, வீரர்கள் நடைப்பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் படி அமெரிக்கா, ரஷ்யா விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட கசிவால் வீரர்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை என நாசா மற்றும் ரஷ்யா விண்வெளி நிறுவனம் விளக்கம் அளித்தது. "Soyuz MS-22 கசிவுக்கான காரணம் விண்கலத்தின் ரேடியேட்டரைத் தாக்கும் மைக்ரோ மெட்டியோராய்டாக இருக்கலாம்" என்று ரோஸ்கோஸ்மோஸ் மூத்த அதிகாரி செர்ஜி கிரிகலேவ் தெரிவித்தார்.
விண்வெளிப் பாறைகள், சிறிய அளவிலான விண்கல், மணல் துகள்கள் போன்றவை விண்வெளியில் சீரற்ற திசைகளில் சுற்றி வருகிறது. இதன் காரணமாக கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு விண்வெளி வீரர்கள் செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் ஆகியோர் 6 மணி நேரம் நடைப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் கசிவு கண்டறியப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது 7 விண்வெளி வீரர்கள் உள்ளனர். 3 ரஷ்ய விண்வெளி வீரர்கள், 3 அமெரிக்க நாசா விண்வெளி வீரர்கள் மற்றும் 1 ஜப்பானிய விண்வெளி வீரர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/