/indian-express-tamil/media/media_files/2025/10/24/coronal-mass-ejection-cme-2025-10-24-18-31-38.jpg)
3 மில்லியன் மைல்/மணி வேகத்தில் வீசிய சூரிய புயல்... பூமிக்கு அடுத்த ஆபத்தா?
சூரியனின் மறுபக்கத்தில் (farside) இருந்து ஒரு ராட்சத வெடிப்பு கிளம்பி, நமது சூரியக் குடும்பத்தையே அதிர வைத்துள்ளது. சமீபத்திய சூரிய சுழற்சியில் பதிவானதிலேயே மிக வேகமான மற்றும் அதிக ஆற்றல் கொண்ட இந்தச் சூரியப் புயல், புவி விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அக்.21-ம் தேதி பிற்பகுதியில் கண்டறியப்பட்ட இந்தச் சம்பவம், விண்வெளியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி, அதன் பாதையில் இருந்த வெள்ளி (Venus) கிரகத்தைத் தாக்கிக் கடந்து சென்றுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, இந்த சூரிய புயல் ஆரம்பத் தாக்குதல் பாதையில் பூமி இல்லை என்று நாசாவின் மாதிரிகள் உறுதிப்படுத்தியுள்ளன. வெள்ளிக்கு பூமியைப் போல காந்தப்புலப் பாதுகாப்பு கவசம் இல்லாததால், சூரியப் புயலின் தாக்குதலில் அதன் மேலடுக்கு வளிமண்டலம் அரிக்கப்பட்டு, சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் அயனிகளைச் (ions) சுரண்டிச் சென்றிருக்கலாம். இது வெள்ளிக்கு ஒரு பெரும் அடியாக இருக்கலாம்.
இந்த சூரிய புயலின் வேகத்தை பற்றிய ஆரம்பத் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன. அமெரிக்க விமானப்படையின் ஆரம்ப அளவீடுகளின்படி, புயலின் வேகம் மணிக்கு சுமார் 5.5 மில்லியன் மைல்கள் (2474 கி.மீ/வி) என மதிப்பிடப்பட்டது.வரலாற்றில் சில சூரிய புயல்கள் மட்டுமே இதைவிட வேகமாகப் பயணித்துள்ளன. 1972-ல் கடற்படை சுரங்கங்களைச் செயலிழக்கச் செய்ததும், 2017-ல் மின் இணைப்புகளைத் தாக்கிய புயலும் இதற்குச் சமமானவை. எனினும், நாசாவின் 3D மாதிரிகள் இந்த வேகத்தை மணிக்கு சுமார் 3 மில்லியன் மைல்கள் (1,320 கி.மீ/வி) எனத் திருத்தி அமைத்துள்ளன. இந்த வேகம் குறைவு என்றாலும், இதுவும் பூமியை நோக்கி வந்தால், அது பயங்கரமான விண்வெளி வானிலையை உருவாக்கப் போதுமானதே.
இந்த வெடிப்பு, கடந்த வாரம் பூமியின் பார்வையிலிருந்து விலகிச் சென்ற AR4246 என்ற பழைய, ஆனால் மிகவும் நிலையற்ற சூரியப் புள்ளிப் பகுதியிலிருந்துதான் கிளம்பியுள்ளது. இதே பகுதிதான் இதற்கு முன்னரும் பூமியை நோக்கிச் சூரியப் புயல்களை அனுப்பி, வடக்கு நாடுகளில் கண்ணைக் கவரும் துருவ ஒளிகளை (Auroras) உருவாக்கியது. தற்போதைக்கு விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் பூமிக்கு நேரடி அச்சுறுத்தல் இல்லை என நிம்மதிப் பெருமூச்சு அளித்துள்ளது.
AR4246 சூரிய புள்ளி பகுதி, நவம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் பூமியை நோக்கிய நிலைக்குத் திரும்பப் போகிறது. விஞ்ஞானிகள் இப்போது மிக உன்னிப்பாகச் சூரியனைக் கண்காணித்து வருகின்றனர். ஏனென்றால், 2025-ம் ஆண்டின் பிற்பகுதியில் சூரியனின் அதிகபட்ச செயல்பாடு (Solar Maximum) உச்சத்தை அடையவிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், இது போன்ற வெடிப்புகள் இன்னும் அதிக வேகத்திலும், அதிக எண்ணிக்கையிலும் நிகழலாம். அதிர்ஷ்டவசமாக இந்த முறை தப்பித்தோம். ஆனால் நமது தொழில்நுட்ப உலகைக் காக்க, அடுத்த சில வருடங்கள் சூரியனிலிருந்து வரும் ஒவ்வொரு புயலையும் நாம் மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us