ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார்ஷிப் "சூப்பர் ஹெவி" ராக்கெட் சோதனை நேற்று (திங்கட்கிழமை) நடைபெற இருந்த நிலையில், ஏப்ரல் 3-வது வாரத்திற்கு திட்டத்தை ஒத்தி வைப்பதாக விண்வெளி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ஷிப் ராக்கெட் 394-அடி (120-மீட்டர்) உயரம் மற்றும் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. இதன் மூலம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ஷிப் ராக்கெட் தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸிக்கு சொந்தமான ஏவதளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.
ஏப்ரல் 4-ம் தேதி ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) வெளியிட்ட அறிவிப்பில், அனைத்துப் பணிகளும் முடிந்து திங்கட்கிழமை ராக்கெட் ஏவுதல் எதிர்பார்க்கப்படும் எனக் கூறியது. அவ்வாறு திட்டமிட்டபடி ஏவுதல் நடைபெறாவிட்டால் அந்த வாரத்திலேயே பேக்கப் திட்டங்களுடன் ராக்கெட் ஏவப்படும் எனக் கூறியிருந்தது. எலான் மஸ்க்கும் கடந்த வாரம் ஸ்டார்ஷிப் ராக்கெட் பயணம் தொடங்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
இந்தநிலையில், ராக்கெட் ஏவுதலுக்கான உரிமம் பெறும் பணிகள் தொடர்ந்து வருவதால் ஸ்டார்ஷிப் ஏவுதல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று எப்.ஏ.ஏ தெரிவித்தது. மேலும் அதன் அறிக்கையின் படி ஏப்ரல் 17-ம் தேதி ராக்கெட் ஏவப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“