ஆர்ட்டெமிஸ் 1 திட்டம் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்கள் அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சோதனை முயற்சியாக ஆளில்லா விண்கலம் மற்றும் ராக்கெட் ஏவும் பணியில் ஈடுபட்டது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் முறையாக விண்வெளி ஏவுகணை அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட்டின் 4 என்ஜின்களில் 3 ஆவது என்ஜின் செயலிழந்ததாக திட்டக்குழு தெரிவித்தது. இதையடுத்து ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.
அதன்படி நேற்று (செப்டம்பர் 3) மீண்டும் ராக்கெட் ஏவுவதற்கான 2ஆவது முயற்சியை மேற்கொள்வதாக நாசா அறிவித்தது. இந்திய நேரப்படி இரவு 11.47 மணிக்கு நிலவுக்கு செலுத்தப்பட இருந்தது. ஆனால் திடீரென திரவ ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது. உடனடியாக பொறியாளர்கள் கசிவு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 3 முயற்சிகளை
மேற்கொண்டனர், ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், ராக்கெட் ஏவும் பணிகளை மீண்டும் நிறுத்தி வைப்பதாக திட்டத்தின் இயக்குநர் சார்லி பிளாக்வெல்-தாம்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
என்ஜினில் அதிகப்படியான திரவ ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது. எரிபொருள் மெதுவாக நிரப்புவதில் இருந்து வேகமாக நிரப்புவதற்கு மாற்றம் செய்யும்போது, கசிவு ஏற்பட தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் திங்கட்கிழமை இந்த பிரச்சனை ஏற்பட்ட போது, சிறிய கசிவு ஏற்பட்டது, ஆனால் பெரியதாக இல்லை. 3 முயற்சிகள் மேற்கொண்டபோதும் கசிவுவை சரிசெய்ய முடியவில்லை. வெப்பநிலை வேறுபாடு இல்லாவிட்டால் சில நேரங்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் திட்டக்குழுவினர் முயற்சி மேற்கொண்டும் சரி செய்ய முடியவில்லை என ஆர்ட்டெமிஸ் மிஷன் மேலாளர் மைக்கேல் சரஃபின் தெரிவித்தார்.
சரஃபின் கூறுகையில், "மிஷன் இன்ஜினியர்கள் ஹைட்ரஜன் கசிவைக் கண்டறிந்தனர், இது அதிகபட்சமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதுகாப்பான அளவை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. இது தீப்பற்றுவதற்கான ஆபத்து இருந்ததால், ஏவுதல் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது" என்றார்.
எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு பார்க்கையில், அடுத்த முயற்சி செப்டம்பரில் நடக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். திட்ட நிர்வாகி ஒருவர் அக்டோபர் கடைசியில் முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
பல வாரங்கள் தாமதம் ஆனாலும் ஆர்ட்டெமிஸ் 1 பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ராக்கெட்டில் மென்பொருள் பிரச்சனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள பொருளில் துண்டிப்பு காணப்பட்டால், hardware மாற்றப் பட வேண்டும். கேஸ்கெட்டில் எளிமையான சேதத்தை கண்டால், அதை விரைவாக மாற்றலாம்.
Hardware மாற்றப் பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ராக்கெட் ஏவுதல் மேலும் தள்ளிப்பேகும். இந்த பிரச்சனைகள் ஆர்ட்டெமிஸ் மற்ற திட்ட பணிகளை பாதிக்காது. ஆர்ட்டெமிஸ் 2, 2024ஆம் ஆண்டிலும், ஆர்ட்டெமிஸ் 3 2025ஆம் ஆண்டிலும் செயல்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. தற்போதைய தாமதங்கள் இதில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.