அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் மீண்டும் மனிதர்கள் நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா ராக்கெட் மற்றும் விண்கலத்தை நிலவுக்கு ஏவ திட்டமிட்டது.
அந்தவகையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி விண்வெளி ஏவுகணை அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்வுன் தொடங்கப்பட்டது. திடீரென என்ஜின் பழுது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக
பொறியியலாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முயற்சி தோல்வியடைந்தது. ராக்கெட்டின் 4 என்ஜின்களில் 3 ஆவது என்ஜின் செயலிழந்தது. என்ஜின் பழுது மட்டுமல்லாது வேறு பிரச்சனைகளும் கண்டறியப்பட்டதாக திட்ட குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், பழுது சரிபார்க்கப்பட்டு இன்று (செப்டம்பர் 3) ஆர்ட்டெமிஸ் 1 மீண்டும் நிலவுக்கு அனுப்பபடும் என திட்ட மேலாளர் மைக்கேல் சரஃபின் தெரிவித்தார். அதன்படி இன்று சனிக்கிழமை புளோரிடா நேரப்படி பிற்பகல் 2.17 மணிக்கு ஆர்ட்டெமிஸ் I ராக்கெட்டை ஏவுவதற்கான 2ஆவது முயற்சியை நாசா மேற்கொள்ள உள்ளது. இந்திய நேரப்படி இரவு 11.47 மணிக்கும் ராக்கெட் ஏவப்பட உள்ளது.
நாசா 1972ஆம் ஆண்டு அப்போலோ திட்டம் மூலம் முதல்முறையாக நிலவுக்கு மனிதர்கள் அனுப்பி சாதனை படைத்தது. அதன்பின் மீண்டும் ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் மனிதர்கள் நிலவுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இன்று அனுப்பபடும் ஆர்ட்டெமிஸ் I-க்கான இறுதிகட்ட பணிகளில் திட்டக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil