அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. புது புது முயற்சிகளை செய்து வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் இறுதியில் நாசா ஒரு பெரு முயற்சியை மேற்கொண்டது.
விண்ணில் சுற்றும் சிறுகோளின் மீது பூமியிலிருந்து அனுப்பபட்ட விண்கலத்தை வேண்டுமென்றே மோதச் செய்து அதன் சுற்றுப்பாதையை மாற்றும் சோதனையில் ஈடுபட்டது. அந்த சோதனை தற்போது வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கிய சிறுகோளால் டைனோசர் இனம் முற்றிலும் அழிந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது சிறுகோளின் தாக்கம் மலை, கடல் நிலையைச் சிதைத்து. இது பிற்காலத்தில் சுனாமி போன்ற பேரழிவுகளை ஏற்படுத்தியது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வருங்காலத்தில் சிறுகோள்களால் பூமிக்கு ஆபத்து நேரிடாத வகையில் பூமியை பாதுகாக்க நாசா திட்டமிட்டது. அதன்படி டார்ட் (DART Mission) திட்டத்தை மேற்கொண்டது. சிறுகோளின் மீது விண்கலத்தை மோதச் செய்து அதன் சுற்றுப்பாதையை மாற்றுவதாகும். பூமியில் இருந்து 63 லட்சம் மைல்கள் தொலைவில் உள்ள 2,500 விட்டம் கொண்ட டிடிமோஸ் அமைப்பை சுற்றிவரும் டிமார்போஸ் (Dimorphos) சிறுகோள் மீது நாசாவின் டார்ட் (DART) விண்கலம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெற்றிகரமாக மோதியது.
நாசா திட்டமிட்டபடி டிமார்போஸ் சிறுகோளின் மீது வேகமாக மோதியது. டார்ட் முயற்சி திட்டமிட்டப்படி இருந்தது, சிறுகோளின் சுற்றுப்பாதையை திசை திருப்பியதா?, எவ்வளவு தூரம் பயனளித்தது என்று தரவுகளை ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என விஞ்ஞானிகள் அப்போது கூறியிருந்தனர்.
இந்நிலையில், வாஷிங்டனில் டார்ட் திட்டம் குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், டார்ட் விண்கலம் அதன் முதன்மை நோக்கத்தை வெற்றிகரமாக செய்துள்ளது. சிறுகோளின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக திசை திரும்பியுள்ளது.
டிமார்போஸ் சிறுகோள், பெரிய முட்டை வடிவிலான சிறுகோளாகும். கிட்டத்திட்ட ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் கூறினர். திரைப்படங்களில் வருவது போல் இருந்தது. ஆனால் இது உண்மையில் வெற்றிகரமாக நடந்துள்ளது. டிமார்போஸ் சிறுகோள் மீது நேரடியாக மணிக்கு 14,000 மைல்கள் (22,531 கிமீ) வேகத்தில் பாய்ந்து சோதனையை மேற்கொண்டது.
நாசாவின் டார்ட் திட்ட விஞ்ஞானி டாம் ஸ்டேட்லர் கூறுகையில், டார்ட் விண்கலம் மோதியதில் டிமார்போஸ் சற்று திசை திரும்பியது. இருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த கூடுதல் தரவுகள் கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“