ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் திட்டத்தின் 3ஆவது முயற்சிக்கு முன்னதாக டேங்கிங் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா நேற்று தெரிவித்தது. மேலும், செப்.23ஆம் தேதி ராக்கெட் ஏவுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இது மாற்றியமைக்கப்பட்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சோதனை முயற்சியாக ஆளில்லா விண்கலம் மற்றும் ராக்கெட் ஏவும் பணியில் ஈடுபட்டது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் முறையாக விண்வெளி ஏவுகணை அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட்டின் 4 என்ஜின்களில் 3ஆவது என்ஜின் செயலிழந்ததாக திட்டக்குழு தெரிவித்தது. இதையடுத்து ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.
இதையடுத்து பழுது சரிபார்க்கப்பட்ட பிறகு, 2ஆவது முறையாக செப்டம்பர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11.47 மணிக்கு நிலவுக்கு செலுத்தப்பட இருந்தது. ஆனால் திடீரென திரவ ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது. பொறியாளர்கள் உடனடியாக கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், ராக்கெட் ஏவும் பணிகளை மீண்டும் நிறுத்தி வைப்பதாக திட்டத்தின் இயக்குநர் சார்லி பிளாக்வெல்-தாம்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தநிலையில் ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் திட்டத்தின் 3ஆவது முயற்சியை செப்டம்பர் 27ஆம் தேதி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. செப்டம்பர் 27 அன்று இந்திய நேரப்படி இரவு 9.07 மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முயற்சியும் ஒத்திவைக்கப்பட்டால் 4ஆவது முறையாக அக்டோபர் 2ஆம் தேதி மீண்டும் நிலவுக்கு செலுத்தப்படும் என நாசா கூறியுள்ளது. நாசா கூறுகையில், முன்னதாக ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சில சிக்கல்களும் கண்டறியப்பட்டு சீர் செய்யப்பட்டு வருகிறது. ஆர்ட்டெமிஸ் 1 திட்டம் 3ஆவது முயற்சிக்கு முன்னதாக செப்டம்பர் 21 விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தின் கிரையோஜெனிக் செயல்விளக்க சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி 4ஆவது முயற்சி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் நாசா மற்றும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான தனியார் விண்வெளி நிறுவனம் (ஸ்பேஸ் எக்ஸ் ) (SpaceX ) இணைந்து அக்டோபர் 3ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு Crew-5 திட்டத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளன. ஆகையால் 4ஆவது முயற்சி குறித்து ஆலோசித்து வருகின்றன.
செப்டம்பர் 21ஆம் தேதி டேங்கிங் சோதனையின் போது, ராக்கெட் மைய நிலை பகுதியில் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்சிஜனை நிரப்பி ஆய்வு செய்யப்படும். பொறியாளர்கள் கசிவு ஏதும் ஏற்படாமல் இருப்பதையும், கோளாறு சரிசெய்யப்பட்டதையும் உறுதிப்படுத்த வேண்டும். புதிதாக மாற்றப்பட்ட ராக்கெட் சீல், கிரையோஜெனிக் அல்லது சூப்பர்கோல்ட் நிலைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கண்காணிப்பர்.
ஆர்ட்டெமிஸ் 1 திட்ட 3ஆவது முயற்சிக்கு நாசாவின் ரேஞ்ச் ஃப்ளைட் சேஃப்டி புரோகிராம் (Range Flight Safety Program) ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்பதல் அளிக்கப்படாவிட்டால், SLS ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் சோதனை மற்றும் பராமரிப்புக்காக மீண்டும் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil