/tamil-ie/media/media_files/uploads/2022/09/NASA-Artemis-1-cryogenic-test-20220922.jpg)
நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் திட்டத்தின் 3ஆவது முயற்சி அடுத்த வாரம் செப்டம்பர் 27ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் நேற்று (செப்டம்பர்.21) கிரையோஜெனிக் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் மீண்டும் எரிபொருள் கசிவு ஏற்பட்டது. இருப்பினும் பொறியாளர்கள் அவற்றை சரிசெய்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சோதனை முயற்சியாக ஆளில்லா விண்கலம் மற்றும் ராக்கெட் ஏவும் பணியில் ஈடுபட்டது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் முறையாக விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட்டின் 4 என்ஜின்களில் 3ஆவது என்ஜின் செயலிழந்ததாக திட்டக்குழு தெரிவித்தது. இதையடுத்து ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.
பின்பு 2ஆவது முறையாக செப்டம்பர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11.47 மணிக்கு நிலவுக்கு செலுத்தப்பட இருந்தது. ஆனால் திடீரென திரவ ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. இந்தநிலையில் பொறியாளர்கள் எரிபொருள் கசிவு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 3ஆவது முயற்சி செப்டம்பர் 27ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். முன்னதாக, கிரையோஜெனிக் சோதனை நடத்தப்படும் என அறிவித்தனர்.
அந்தவகையில் நேற்று கிரையோஜெனிக் சோதனை நடத்தப்பட்டது. இதில் மீண்டும் அதேபகுதியில், அதேநேரத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் அடுத்த வாரம் ஏவுதல் பணி நடைபெறுமா? என குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திட்ட இயக்குனரான சார்லி பிளாக்வெல்-தாம்சன், ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் 3ஆவது முயற்சிக்கான தேதி குறித்து உறுதியாக கூறவில்லை. இருப்பினும் நேற்று சோதனை நன்றாக நடந்ததாக அவர் கூறினார். மேலும் தரவுகள் வைத்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
புதிதாக சில கருவிகள் மாற்றப்பட்டபோதும் அதே இடத்தில், அதே நேரத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் கசிவு ஏற்பட்டது. இருப்பினும் பொறியாளர்கள் அவற்றை சரிசெய்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு, மற்றொரு கசிவு ஏற்பட்டதாக கூறினர்.
அனைத்து சோதனை நோக்கங்களும் பூர்த்தி செய்யப்பட்டதாக பிளாக்வெல்-தாம்சன் கூறினார். இருப்பினும் மேலாளர்கள் 322-அடி (98-மீட்டர்) ராக்கெட் ஏவுதலுக்கு தயாராக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
முந்தைய சோதனையில் ஏற்பட்ட கசிவு அதேஅளவில் மீண்டும் காணப்பட்டதால் அடுத்த வாரம் முயற்சி சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பல மணிநேரங்கள் பொருத்தப்பட்டு, தொடங்கப்பட்ட பிறகு, நாசா இறுதியாக கிட்டத்தட்ட 1 மில்லியன் கேலன் (4 மில்லியன் லிட்டர்) எரிபொருளை ராக்கெட்டில் நிரப்பியது.
செப்டம்பர் 3 ஏவுதல் தாமதத்தைத் தொடர்ந்து, நாசா கசிவு பைப்பில் இரண்டு கருவிகளை மாற்றியது. இருப்பினும் இது பயனளிக்கவில்லை. ஹைட்ரஜன் கசிவு ஏற்படுகிறது. எரிபொருள் செயல்முறை, மிகக் குளிர்ந்த திரவ ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை ஏற்றுவதற்கு மெதுவாக எளிதாக்குகிறது. புதன்கிழமை பெரிய கசிவு தோன்றிய பிறகு, திட்டக் குழு குழாய்களை இன்னும் குறைவான அழுத்தத்திற்கு உட்படுத்தியது.
1960களின் பிற்பகுதியிலும் 1970களின் தொடக்கத்தில் செயல்படுத்தப்பட்ட நாசாவின் அப்பல்லோ திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவுக்கு சாட்டர்ன் V ராக்கெட் மூலம் அனுப்பபட்டனர். சாட்டர்ன் V ராக்கெட்டை விட இப்போது செயல்பாட்டில் உள்ள விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மிகவும் சக்தி வாய்ந்தது. இப்போது போலவே, 1990களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களிலும் நாசா ஹைட்ரஜன் கசிவுகளுடன் போராடியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.