/indian-express-tamil/media/media_files/2025/08/20/radical-tech-2025-08-20-21-50-32.jpg)
செவ்வாய் கிரகத்தில் இனி ஆக்சிஜன் உருவாக்கலாம்: நாசா விஞ்ஞானிகளின் புது முயற்சி!
செவ்வாய்க் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கு, ஆக்சிஜன் சிலிண்டர்களைச் சுமந்து செல்லத் தேவையில்லை. மாறாக, தண்ணீர், காந்தங்கள், நுண்ஈர்ப்பு விசை போன்றவற்றின் உதவியுடன் அங்கேயே ஆக்சிஜனை உருவாக்க முடியும். இது கனவு போலத் தோன்றினாலும், நாசாவின் விஞ்ஞானிகள் இதற்கான புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். ஜார்ஜியா டெக் ரிசர்ச் கார்ப்பரேஷன், ஜினர் லேப்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், இந்தத் தொழில்நுட்பம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஏன் இந்தத் தொழில்நுட்பம் முக்கியம்?
விண்வெளியில் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் என்பது மிகவும் அத்தியாவசியமானது. ஆனால், அதை நீண்ட தூர விண்வெளிப் பயணங்களுக்குப் பெரிய சிலிண்டர்களில் எடுத்துச் செல்வது என்பது சாத்தியமற்றது. இதனால், விண்வெளிப் பயணத்தின்போது, விண்வெளி வீரர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை அங்கேயே உற்பத்தி செய்ய வேண்டும். இதற்காக, தற்போது பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மிகவும் பெரிதாகவும், சிக்கலாகவும் உள்ளன.
இந்தச் சவாலை சமாளிக்கவே, நாசாவின் 'இன்னோவேடிவ் அட்வான்ஸ்ட் கான்செப்ட்ஸ்' திட்டத்தின் கீழ், புதிய ஆய்வு நடைபெறுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில், தண்ணீரைச் சுழற்சிக்கு உட்படுத்தி, சக்திவாய்ந்த காந்தங்களைப் பயன்படுத்தி, அதில் இருந்து ஆக்சிஜன், ஹைட்ரஜனைப் பிரிக்கிறார்கள். இது எந்தவித அசைவுள்ள பாகங்களும் இல்லாமல் செயல்படுவதால், நுண்ஈர்ப்பு விசையில் இதனைப் பராமரிப்பது மிகவும் எளிது.
50% எடை குறைப்பு சாத்தியம்
இந்த காந்த தொழில்நுட்பம், தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் உற்பத்தி அமைப்பை விட, உபகரணங்களின் எடையை சுமார் 50% வரை குறைக்கும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார்கள். ஒரு நாளைக்கு 4 விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவுக்கு சுமார் 3.36 கிலோகிராம் ஆக்சிஜன் தேவைப்படும். இந்த எடை குறைப்பு, விண்கலத்தை இலகுவாக மாற்றவும், உதிரி பாகங்கள் தேவையை குறைக்கவும், பயணத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்றவும் உதவும்.
இந்தத் தொழில்நுட்பம் வெற்றிபெற்றால், அதன் பயன்பாடு ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் நின்றுவிடாது. செவ்வாயில் உள்ள பனிக்கட்டிகளை பயன்படுத்தி நேரடியாகவே ஆக்சிஜன் மற்றும் எரிபொருளை உற்பத்தி செய்ய இந்தத் தொழில்நுட்பம் உதவக்கூடும். இது எதிர்கால செவ்வாய் பயணங்களுக்கும், அங்கு மனிதன் நிரந்தர வாழ்விடத்தை உருவாக்குவதற்கும் ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.