நாசாவின் க்ரூ-5 திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற 4 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இன்று (மார்ச் 13) காலை வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். இன்று காலை 7.34 மணிக்கு புளோரிடா கடற்கரையில் உள்ள தம்பா பகுதியில் தரையிறங்கினர்,
க்ரூ-5 திட்டத்தில் அனுப்பபட்ட நாசா விண்வெளி வீரர்களான நிக்கோல் மான் மற்றும் ஜோஷ் கசாடா, ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்சா) விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அன்னா கிகினா ஆகியோர் பூமிக்கு திரும்பினர்.
கடந்தாண்டு அக்டோபர் 5-ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டின் மீது க்ரூ-5 வீரர்கள் ஐ.எஸ்.எஸ்ஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் 6 மாத காலம் அறிவியல் பணி முடிந்து இன்று அவர்கள் மீண்டும் பூமிக்கு திருப்பினர் என்று நாசா அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 2-ம் தேதி க்ரூ-6 மிஷன் வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர், இதில் நாசா விண்வெளி வீரர்களான ஸ்டீபன் போவன் மற்றும் வாரன் ஹோபர்க், ரஷ்ய விண்வெளி வீரர் ஆண்ட்ரே ஃபெட்யாவ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் விண்வெளி வீரர் சுல்தான் அல்னியாடி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“