/indian-express-tamil/media/media_files/2025/09/10/comet-visible-2025-09-10-21-37-16.jpg)
பூமிக்கு அருகில் வருகிறது புதிய வால்நட்சத்திரம்: வெறும் கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பு!
அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள மவுண்ட் லெமன் ஆய்வு மைய விஞ்ஞானிகள் கடந்த ஜனவரி மாதம் புதிய வால்நட்சத்திரத்தை (C/2025 A6, Lemmon) கண்டுபிடித்தனர். இந்த வால்நட்சத்திரம் தற்போது சூரிய குடும்பத்தின் உட்புறப் பகுதிக்குள் பயணித்து வருகிறது. இது விரைவில் பிரகாசமாகத் தென்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய தொலைநோக்கி அல்லது பைனாகுலர்கள் மூலம் இதை எளிதாகப் பார்க்கலாம். இது அக்டோபர் 20 அன்று பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. அப்போது, வெறும் கண்களாலோ அல்லது பைனாகுலர்கள் மூலமாகவோ பார்க்க வாய்ப்புள்ளது. தற்போதைய கணிப்புகளின்படி, அக்டோபர் தொடக்கத்தில் இது மங்கலாகவும், ஆனால் பார்க்க உற்சாகமானதாகவும் நம் வானில் தென்படலாம்.
ஸ்பேஸ்.காம் (Space.com) அறிக்கையின்படி, அரிசோனா பல்கலைக் கழகத்தின் மவுண்ட் லெமன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் ஜனவரி மாதம் இந்த வால்நட்சத்திரத்தை முதன்முதலில் கண்டறிந்தனர். முதலில் இது ஒரு மங்கலான சிறுகோள் (asteroid) போலத் தோன்றியது. அதாவது, வெறும் கண்களால் பார்க்கக்கூடிய மிக மங்கலான நட்சத்திரத்தைவிட சுமார் 1 மில்லியன் மடங்கு மங்கலாக தெரிந்தது. அடுத்தடுத்த ஆய்வுகளுக்குப் பிறகு, இது வால்நட்சத்திரம் என உறுதிப்படுத்தப்பட்டது.
C/2025 A6 (லெம்மன்) எனப் பெயரிடப்பட்ட இதன் கணக்கீடுகள், இது நவம்பர் 8 அன்று சூரியனுக்கு மிக அருகில் (சுமார் 49 மில்லியன் மைல்கள் தூரம்) வரும் என்றும், அக்.20 அன்று பூமிக்கு மிக அருகில் (சுமார் 55 மில்லியன் மைல்கள் தூரம்) கடந்து செல்லும் என்றும் காட்டுகின்றன.
வால்நட்சத்திரத்தைப் பார்ப்பது எப்படி?
வால்நட்சத்திரங்கள் உறைந்த வாயு மற்றும் தூசியால் ஆனவை. லெமன் வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் வரும்போது, அதன் பனிக் கட்டிகள் ஆவியாகி, வால்நட்சத்திரத்தின் மையத்தைச் சுற்றி ஒளிரும் மேகத்தை (கோமா) உருவாக்குகின்றன. மேலும், தூசித் துகள்கள் வால் போல அதன் பின்னால் பாய்கின்றன.
இந்த வால்நட்சத்திரத்தின் பிரகாசம் குறித்த கணிப்புகள் மாறுபடுகின்றன. சில வல்லுநர்கள் அக்டோபர் தொடக்கத்தில் இதன் பருமன் +4 (அ) +5-ஐ எட்டலாம், இதனால் வெறும் கண்களால் மங்கலாகப் பார்க்க முடியும் என்று கூறுகின்றனர். மற்றவர்கள் +7 மட்டுமே இருக்கும், எனவே பைனாகுலர்கள் தேவைப்படும் என்று கணிக்கின்றனர். செப்டம்பர் தொடக்கத்தில் இந்த வால்நட்சத்திரம் காலை நேரத்தில் +9 அல்லது +10 பருமனில் மங்கலாகத் தென்படுகிறது. அக்டோபர் தொடக்கத்தில் இது +6 அல்லது +7 பருமனை அடையலாம், அப்போது பைனாகுலர்கள் மூலம் இதை எளிதாகக் காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.