/indian-express-tamil/media/media_files/2025/09/22/asteroid-ryugu-2025-09-22-22-31-43.jpg)
பூமிக்கு நீர் வந்தது எப்படி? பழங்கால விண்கல்லில் கிடைத்த ஆதாரம்!
விண்வெளியில் தண்ணீர் எங்கிருந்து வந்தது? இந்த கேள்விக்கு நீண்ட காலமாக ஒரு விடை இருந்தது. சூரிய மண்டலம் உருவான ஆரம்பக் கட்டத்தில், அதாவது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், சிறுகோள்கள் போன்ற விண்வெளிப் பொருட்களில் நீர் இருந்தது. ஆனால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நீர் எல்லாம் ஆவியாகி மறைந்துவிட்டதாகவே விஞ்ஞானிகள் நம்பி வந்தனர்.
ஆனால், ஜப்பானின் ஹயபுசா2 விண்கலம் கொண்டுவந்த சிறிய பாறைத் துண்டுகளின் புதிய ஆய்வு, இந்த நம்பிக்கையை தலைகீழாக மாற்றி விட்டது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகும், ரியுகு சிறுகோளுக்கு மூலமான விண்கல்லில் திரவ நீர் பாய்ந்து வந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
டோக்கியோ பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த சிறு துண்டுகளில் உள்ள லுடீஷியம் (Lu) மற்றும் ஹாஃப்னியம் (Hf) ஐசோடோப்புகளை ஆய்வு செய்தனர். இந்த வேதியியல் தடயங்களை ஆய்வு செய்தபோது, நீர் நீண்ட காலம் நீடித்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. "இது சிறுகோள்களில் நீர் எவ்வளவு காலம் தங்கியிருந்தது என்ற நமது எண்ணத்தையே மாற்றுகிறது. நீர் நினைத்ததை விட மிக வேகமாக ஆவியாகி விடாமல், நீண்ட காலம் நீடித்திருக்கிறது" என்று ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
விஞ்ஞானிகள் இந்த அதிசயத்திற்கு ஒரு காரணத்தையும் முன்வைக்கிறார்கள். மாபெரும் மோதல் அந்த மூல விண்கல்லைத் தாக்கியிருக்கலாம். அந்த மோதலின் வெப்பம், அதன் உள்ளே புதைந்திருந்த பனிக்கட்டிகளை உருக்கி, திரவ நீராக மாற்றி, பாறைகளுக்குள் பாயச் செய்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்த மோதல், மூல விண்கல்லைப் பல துண்டுகளாக உடைத்து, இன்று நாம் காணும் ரியுகு சிறுகோளை உருவாக்கியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், கார்பன் நிறைந்த சிறுகோள்கள் பில்லியன் கணக்கான ஆண்டுகளாகப் பனிக்கட்டிகளைப் பாதுகாத்து வந்திருக்கலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பூமியின் ஆரம்பக் காலங்களில், நாம் நினைத்ததை விட அதிக நீர் சிறுகோள்களிலிருந்து பூமிக்கு வந்திருக்கலாம். அது, நமது பெருங்கடல்கள், வளிமண்டலம் உருவாக நாம் இதுவரை அறியாத வகையில் பங்களித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஹயபுசா2 விண்கலம் வெறும் சில கிராம் பொருட்களை மட்டுமே கொண்டுவந்ததால், அரிசி தானியத்தை விட சிறிய துண்டுகளிலிருந்து இந்தத் தகவல்களைப் பிரித்தெடுக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய அதிநவீன புவி வேதியியல் நுட்பங்களைப் பயன்படுத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us