/indian-express-tamil/media/media_files/2025/11/03/doomsday-vault-2025-11-03-21-08-21.jpg)
உலகம் அழிந்தாலும் உணவு அழியாது... -18°C குளிரில் பாதுகாக்கப்படும் லட்சக்கணக்கான விதைகள்!
காலநிலை மாற்றம் தீவிரமடைந்து, முக்கிய உணவுப் பயிர்கள் அனைத்தும் அழிந்து போகும் பட்சத்தில் எஞ்சியிருக்கும் மனிதர்கள் உயிர்வாழ என்ன செய்வார்கள்? பசியைப் போக்க கோதுமையையும், அரிசியையும், சோளத்தையும் எங்கே தேடுவார்கள்? இந்தக் கேள்விக்கான பதில்தான், ஆர்க்டிக் பனிப்பிரதேசத்தில், நார்வே நாட்டின் மலையொன்றின் ஆழத்தில் மறைந்திருக்கிறது. அதன் புனைப்பெயர்: "டூம்ஸ்டே வால்ட்" (Doomsday Vault). இதன் உண்மையான பெயர் ஸ்வல்பார்ட் உலகளாவிய விதை பெட்டகம் (Svalbard Global Seed Vault). இது வங்கிதான், ஆனால் பணத்தையோ தங்கத்தையோ சேமிக்க அல்ல; விலை மதிக்க முடியாத விதைகளைச் சேமிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆர்க்டிக் வட்டத்தில், பனி படர்ந்த ஸ்வல்பார்ட் தீவில், ஒரு மலைக்குள் சுமார் 400 அடி ஆழத்தில் இந்தக் குளிரூட்டப்பட்ட சுரங்கம் அமைந்துள்ளது. இதன் நுழைவாயில் மட்டும் பனிக்கு வெளியே தெரியும். பார்ப்பதற்கு ஏதோ ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வில்லனுடைய ரகசியத் தளம் போலக் காட்சியளிக்கும்.
மனிதகுலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கான ஒரு காப்பீட்டுத் திட்டம் (Insurance Policy). உலகெங்கிலும் சுமார் 1,700 விதை வங்கிகள் (Gene Banks) உள்ளன. அவை அந்தந்த நாடுகளின் உள்ளூர் பயிர் வகைகளைப் பாதுகாக்கின்றன. ஆனால் போர், உள்நாட்டுக் குழப்பம், வெள்ளம், தீ போன்ற பேரழிவுகளால் இந்த உள்ளூர் வங்கிகள் அழிந்துவிட்டால்? உதாரணமாக, சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரில், அலெப்போ நகரில் இருந்த மிக முக்கியமான விதை வங்கி ஒன்று சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, அவர்கள் விதைகளின் நகல் ஒன்றை இந்த ஸ்வல்பார்ட் பெட்டகத்தில் முன் கூட்டியே சேமித்து வைத்திருந்தனர். போருக்குப் பிறகு, அவர்கள் ஸ்வல்பார்டில் இருந்து விதைகளைத் திரும்பப் பெற்று, தங்கள் விவசாயத்தை மீட்டெடுத்தனர். இதுதான் இதன் முக்கிய நோக்கம். இது ஒரு காப்பகமாக (Backup) செயல்படுகிறது.
எப்படி வேலை செய்கிறது?
இந்த பெட்டகம் மலைக்குள் ஆழமாக இருப்பதால், அங்கு இயற்கையாகவே உறைபனிக்குக் கீழ் (Permafrost) வெப்பநிலை நிலவுகிறது. இதுவே விதைகளைப் பாதுகாக்கப் போதும். ஆனாலும், கூடுதல் பாதுகாப்பிற்காக, சக்திவாய்ந்த குளிரூட்டும் அமைப்புகள் மூலம் இதன் வெப்பநிலை நிலையாக -18°C (-0.4°F) இல் வைக்கப்பட்டுள்ளது. விதைகள் அனைத்தும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, 3 அடுக்கு ஃபாயில் உறைகளில் (Foil Packets) சீல் வைக்கப்பட்டு, பெரிய பெட்டிகளில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இந்த உறைகள் ஈரப்பதத்தைத் தடுக்கும்.
மின்சாரம் நின்றால்? ஒருவேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், அந்தப் பகுதியின் இயற்கையான உறைபனி காரணமாக, விதைகள் பல ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இது ஒரு வங்கியின் லாக்கர் போன்றது. எந்த நாடு தனது விதைகளை வைக்கிறதோ, அதற்கான உரிமை அந்த நாட்டுக்கு மட்டுமே உண்டு. நார்வே அரசு அந்தப் பெட்டகத்தைப் பாதுகாக்கிறது, அவ்வளவே. வேறு யாரும் அதைத் திறக்கவோ, எடுக்கவோ முடியாது.
இன்றுவரை, இந்த பெட்டகத்தில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட தனித்துவமான பயிர் வகைகள் சேமிக்கப்பட்டுள்ளன. இது உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை. ஆப்பிரிக்காவின் சோளம் முதல் ஆசியாவின் அரிசி வரை அனைத்தும் இதில் அடக்கம். இந்த பெட்டகத்தின் மொத்தக் கொள்ளளவு சுமார் 45 லட்சம் பயிர் வகைகளைச் சேமிப்பதாகும். (ஒவ்வொரு வகையிலும் சராசரியாக 500 விதைகள்).
இதை நவீன கால "தாவரங்களுக்கான நோவாவின் பேழை" (Noah's Ark for plants) என்றழைக்கிறார்கள். இது பூகம்பம் மற்றும் அணுகுண்டுத் தாக்குதல்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து கணிசமான உயரத்தில் இருப்பதால், துருவப் பனிப் பாறைகள் உருகினாலும் இது மூழ்காது. இந்தியாவும் தனது விதை வகைகளின் நகல்களை இந்த உலகப் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்து உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us