/indian-express-tamil/media/media_files/2025/09/18/skyscrapper-sized-asteroid-2025-09-18-12-32-11.jpg)
பூமிக்கு மிக அருகில் வருகிறது ராட்சத விண்கல்... பதற்றத்தில் விஞ்ஞானிகள்!
பூமியை நோக்கிப் பறந்து வரும் ராட்சத விண்கல், வானளாவிய கட்டிடம் அளவுக்குப் பெரியது. இந்த விண்கல், வியாழக்கிழமை செப்.18 அன்று, நம் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல உள்ளது. இந்த விண்கல்லுக்கு 2025 FA22 எனப்பெயரிட்டுள்ள விஞ்ஞானிகள், இதன் வேகம் மணிக்கு 24,000 மைல்களுக்கும் அதிகம் என்கிறார்கள்.
ஆபத்தில் இருந்து தப்பிய பூமி!
இந்த விண்கல், ஆரம்பத்தில் பூமிக்கு மிக அபாயகரமானதாகக் கருதப்பட்டது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் அபாயப் பட்டியலில், இது முதலிடத்தில் இருந்தது. "இந்த விண்கல் 2089-ல் பூமியில் மோத 0.01% வாய்ப்பு உள்ளது" என விஞ்ஞானிகள் கணித்தனர். இது உலகெங்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், சமீபத்தில் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளில், இந்த விண்கல் பூமிக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு பெரியது இந்த விண்கல்?
இந்த விண்கல் 427 முதல் 951 அடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை இது பூமியைத் தாக்கினால், நகரத்தையே அழிக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது. ஆனால், நல்லவேளையாக, இது பூமியைத் தாக்காது. வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், இது பூமிக்கு மிக அருகில் வரும். அப்போது, பூமிக்கும் இந்த விண்கல்லுக்கும் இடையிலான தூரம் சுமார் 8,35,000 கி.மீ. இருக்கும். ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ஸ் 2 என்ற தொலைநோக்கி மூலம் இந்த விண்கல் மார்ச் மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
'ஆபத்தான விண்கற்கள்' என்றால் என்ன?
பொதுவாக, விண்கற்கள் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் உள்ள சிறுகோள் பட்டையில்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆபத்தற்றவை. ஆனால், சில விண்கற்கள் மட்டும் பூமிக்கு மிக அருகில் வரும். நாசாவின் கூற்றுப்படி, பூமியில் இருந்து சுமார் 30 மில்லியன் மைல் தொலைவில் உள்ள விண்கற்கள், 'புவிக்கு அருகில் உள்ள விண்கற்கள்' (NEOs) என அழைக்கப்படுகின்றன.
இதில், 460 அடிக்கும் பெரியதாகவும், பூமிக்கு 4.65 மில்லியன் மைல்களுக்கும் குறைவான தூரத்திலும் வரும் விண்கற்கள், 'ஆபத்தான விண்கற்கள்' என வகைப்படுத்தப்படுகின்றன. நாசாவின் தரவுகளின்படி, மொத்தம் 37,500 NEO-க்கள் உள்ளன. இவற்றில் சுமார் 2,500 விண்கற்கள் ஆபத்தானவையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.