இன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம்.. தமிழகத்தில் எப்போது பார்க்கலாம்?
Partial solar eclipse 2022: சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும்.
உலக அளவில் மதியம் 2.19-க்கு தொடங்கும் சூரிய கிரகணம் மாலை 6.32 மணி வரை நிகழும்.
நாடு முழுவதும் இன்று (அக்.25) பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது ஒரு அரிதான வானியல் நிகழ்வு. இதை வெறுங்கண்களால் பார்க்கக் கூடாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisment
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும்.
சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
அந்தவகையில் அக்டோபா் 25-ஆம் தேதியான இன்று, பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. உலக அளவில் மதியம் 2.19-க்கு தொடங்கும் சூரிய கிரகணம் மாலை 6.32 மணி வரை நிகழும்.
ரஷ்யாவின் தெற்குப் பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்ரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலிருந்து பகுதி சூரிய கிரகணத்தைக் காணலாம். ரஷ்ய நாட்டின் மத்தியப் பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹேண்ட்லேவில் சூரிய கிரகணம் 55 சதவீதம் வரை தெரியும். தமிழகத்தில் மாலை 5.14 மணிக்கு தொடங்கி, சுமார் 45 நிமிடங்களுக்கு சூரிய கிரகணம் தெரியும். சூரியன் மறையும் நேரத்தில் அதன் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாகக் காட்சியளிக்கும்.
இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரங்களிலும் இந்த நிகழ்வைக் காணலாம்.
நாடு முழுவதும் கோளரங்குகளில் சூரிய கிரணகத்தை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சூரியனை கிரகணத்தின்போதோ, சாதாரணமாகவோ வெறுங்கண்களாலோ அல்லது பைனாகுலர் மூலமாகவோ காணக்கூடாது.
சூரிய கிரகணத்தை காண விரும்பும் மக்களுக்காக, இரண்டு இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் மெய்நிகர் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. நைனிடால் ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் நிறுவனம் (ARIES) மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) ஆகியவை செவ்வாய்கிழமை நடைபெறும் பகுதி சூரிய கிரகணத்தை தங்களது யூடியூப் சேனல்களில் மாலை 4 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யும்.
தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் 2020 ஜூன் 21 ஆம் நாள் பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. மீண்டும் 2027 ஆகஸ்ட் 2-ல் தமிழ்நாட்டில் இதுபோன்ற பகுதி சூரிய கிரகணத்தைக் காணலாம்.
இதைத் தொடா்ந்து வரும் நவம்பா் 8-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிடங்களே தென்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“