உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று (அக்டோபர் 25) பகுதி அளவு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கிட்டத்திட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பகுதி சூரிய கிரகணம் நிகழவிருப்பதால் இது அரிய நிகழ்வு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இது இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும்.
சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் நிகழும். சூரிய கிரகணத்தின் போது நிலவு (சந்திரன்) சூரியனை மறைக்கிறது. இது 2 வகைகளாப் பிரிக்கலாம். முழு நிழல் சூரிய கிரகணம், பகுதி அளவு சூரிய கிரகணம் ஆகும். முழு நிழல் சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கிறது.
பகுதி அளவு சூரிய கிரகணத்தின் போது சந்திரன், சூரியனை 40-80 சதவீதம் வரை மறைக்கிறது.
அந்தவகையில் இன்று பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்தியா, ரஷ்யாவின் தெற்குப் பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள் போன்ற பல்வேறு நாடுகளில் இன்று சூரிய கிரகணத்தை காண முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
உலக நேர கால அட்டவணைப்படி மதியம் 2.15 முதல் மாலை 6.30 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளியில் சூரிய கிரகணத்தை பல்வேறு பகுதிகளிலிருந்து காண முடியும்.
குறிப்பாக ரஷ்யாவின் மத்திய பகுதியில் 80% வரை சூரிய கிரகணத்தை காண முடியும் என கூறியுள்ளனர். இந்தியாவில் 40% வரை காண முடியும். தமிழகத்தில் 5.14க்கு தொடங்கி 5.45 மணி வரை 30 நிமிடங்கள் சூரிய கிரகணத்தை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8% வரை கிரகணம் தெரியும் எனவும் கூறியுள்ளனர்.
செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை
கிரணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது. மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கிரகணத்தின் போது சூரிய கதிர்கள் கண்ணுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதால் அதை வெறும் கண்களால் பார்க்க கூடாது.
அறிவியல் ஆலோசனை பெற்ற தொலைநோக்கி, எக்லிப்ஸ் கண்ணாடிகள் போன்ற சிறப்பு உபகரணங்களுடன் பார்க்க வேண்டும். எக்லிப்ஸ் கண்ணாடிகள் கருப்பு பாலிமர், அலுமினிய மைலார் போன்ற பொருட்களால் ஆனது. அதனால் இது கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். வாகன ஓட்டிகள் கிரகணத்தின் போது ஹெட்லைட்களை எரிய விட்டவாறு சாலையில் வாகனத்தை இயக்கவும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கோயில்கள் மூடல்
சூரிய கிரகணத்தையொட்டி கோயில்கள் மூடப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை காலை 11 மணிக்கு சாத்தப்பட்டு இரவு 7 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் நடை காலை 8.11 மணிக்கு சாத்தப்பட்டு இரவு 7.30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.