அண்மையில் விஞ்ஞானிகள் புதிய வால் நட்சத்திரம் ஒன்றை கண்டுபிடித்தனர். அதற்கு C/2022 E3 (ZTF) எனப் பெயரிடப்பட்டது. தற்போது சூரிய குடும்பத்தில் சுற்றி வரும் வால் நட்சத்திரம், விரைவில் சூரியன் மற்றும் பூமிக்கு அருகில் வந்து செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் ஸ்விக்கி டிரான்சியன்ட் ஃபெசிலிட்டியில் உள்ள வைட்-ஃபீல்ட் சர்வே கேமரா மூலம் வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தனர். இது ஜனவரி 12-ம் தேதி சூரியனுக்கு மிக அருகிலும், பிப்ரவரி 2-ம் தேதி பூமிக்கு அருகிலும் வரவுள்ளது.
வெறும் கண்களால் பார்க்கலாம்.. ஆனால்?
பொதுவாக வால் நட்சத்திரங்கள் கணிக்க முடியாதவை. ஆனால் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (JPL) படி, புதிய வால் நட்சத்திரம் தற்போதைய பாதையில் தொடர்ந்தால், தொலைநோக்கிகள் மூலம் கண்டறிவது மிகவும் எளிது. மேலும், இரவு நேரத்தில் (இருட்டில்) வெறும் கண்களால் பார்க்க முடியும். நட்சத்திரம் வடமேற்கு திசையில் வேகமாக நகரும் போது வடக்கில் உள்ளவர்கள் காலை நேரத்தில் வானில் காண முடியும்.
pace.com கருத்துப்படி, வானத்தில் சந்திரன் (நிலா) மங்கலாக இருக்கும்போது நட்சத்திரத்தை காண முடியும். அதாவது ஜனவரி 12-ம் தேதி இதை சிறப்பாக காணலாம். மேலும் பிப்ரவரி 2-ம் தேதி பூமிக்கு அருகில் வரும் போது அது கேமலோபார்டலிஸ் விண்மீன் தொகுப்பில் இருக்கும்.
வால் நட்சத்திரம் 43 மில்லியன் கி.மீ தூரத்தில் இருந்து பூமிக்கு வரும். அது நமது கிரகத்தை நெருங்கும் போது, வினாடிக்கு 57.4 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/