/indian-express-tamil/media/media_files/2025/09/13/blood-moon-eclipse-2025-09-13-11-38-07.jpg)
பூமியின் நிழலால் நிகழ்ந்த அதிசயம்: நீல நிறத்தில் ஜொலித்த நிலா - நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்!
கடந்த செப்டம்பர் 7 மற்றும் 8-ம் தேதி இரவு, உலகமே ஆச்சரியத்துடன் பார்த்த ஒரு அரிய வானியல் நிகழ்வு நடந்தது. பூமியின் நிழல், முழு நிலவை மெதுவாக விழுங்கிய அந்த அற்புத தருணத்தை கோடிக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
பூமியின் நிழல், நிலவை ஏன் சிவப்பு நிறமாக மாற்றியது?
இது சாதாரண நிகழ்வு அல்ல. பௌர்ணமி நிலவு, பூமியின் அடர்ந்த நிழலான ’உம்பிரா’ (Umbra) வழியாகப் பயணித்தபோதுதான் இந்த முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. உம்பிரா என்பது கூம்பு வடிவத்தில் விண்வெளியில் நீண்டிருக்கும் பூமியின் இருண்ட நிழலாகும். இந்த நிழல் நிலவின் மீது படர்ந்து அதை மெதுவாக இருண்டதாக மாற்றியது. சீனாவில் எடுக்கப்பட்ட ஒரு படத்தில் இந்நிகழ்வு தெளிவாகக் காணப்பட்டது. அதில், நிலவு இருண்ட நிழலுக்குள் நுழைந்து மெதுவாக நகர்வது அழகாகப் படம்பிடிக்கப்பட்டது. சுமார் 83 நிமிடங்கள், முழு நிலவும் பூமியின் நிழலுக்குள் மறைந்து இருந்தது.
சிவப்பு மற்றும் நீல நிறத்தின் மர்மம் என்ன?
நிலவு முழுமையாக கிரகண நிழலுக்குள் இருந்தபோது, அது திடீரென சிவப்பு நிறத்தில் ஜொலித்தது. ஏன் தெரியுமா? சூரிய ஒளி, பூமியின் வளி மண்டலத்தின் வழியாகச் செல்லும்போது ஒளிவிலகல் அடைந்து, அந்தச் சிவப்பு நிற ஒளி மட்டும் நிலவின் மீது விழுந்தது. இதுவே அந்த மாயாஜால சிவப்பு நிறத்திற்கு காரணம். ஆனால், இந்த நிகழ்வின் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், நிழலின் விளிம்பில் நிலவின் ஒரு பகுதி நீல நிறத்தில் ஒளிர்ந்ததுதான். இது, சூரிய ஒளி பூமியின் ஓசோன் அடுக்கு வழியாகச் செல்லும்போது நீல ஒளியை மட்டும் ஊடுருவ விடுவதால் நிகழ்ந்தது.
அண்டார்டிகா முதல் ஆப்பிரிக்கா வரை, இந்த அரிய வானியல் நிகழ்வை பலரும் பார்த்து ரசித்தனர். இது, விண்வெளியின் பிரம்மாண்டத்தையும், பூமியின் அடுக்கில் நடக்கும் அதிசயங்களையும் நமக்கு உணர்த்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.