ரஷ்யா ஈரானிடையே நட்பு உறவை மேம்படுத்தும் வகையில் ஈரானின் செயற்கைக்கோளை சுமந்தபடி ரஷ்யா ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. மேற்கத்திய நாடுகளின் தடைகளால் ரஷ்யா ஈரான் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. தடைகளுக்கு மத்தியில் பரஸ்பரம் இரு நாடுகளும் உதவிக் கொள்ளும் வகையில் நட்பு உறவை பலப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் நேற்று (செவ்வாய்கிழமை) ஈரானின் "கய்யாம்" என்று அழைக்கப்படும் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் ரஷ்யாவின் சோயஸ் என்ற ராக்கொட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நேற்று காலை 08:52 மணிக்கு, தெற்கு கஜகஸ்தானில் அமைந்துள்ள ரஷ்ய விண்வெளி ஏவுதளங்களின் தாயகமான பைகோனூர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) விண்வெளி நிறுவனம் இதை ஒளிபரப்பியது.
இதற்கிடையே உக்ரைனை உளவு பார்க்கவே ஈரானின் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மறுத்துள்ள ஈரான், செயற்கைகோளின் முழு கட்டுப்பாடும் முதல் நாளிலிருந்தே தங்கள் வசம் தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளது. விவசாயம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், ரஷ்யா உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. அப்போதே ஈரானுடனான தனது உறவுவை பலப்படுத்த ரஷ்யா முயன்றுள்ளது. கடந்த வாரம் வெளியான வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில், ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையே வளர்ந்து வரும் விண்வெளி ஒத்துழைப்பு கவலை அளிப்பதாக உள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் செயற்கைக்கோள் உக்ரைன் ராணுவ இலக்குகளை கண்காணிக்க உதவுவது மட்டுமல்லாமல், இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடுகளை கண்காணிக்க கூடும் எனவும் அச்சம் தெரிவித்தனர்.
ரஷ்ய அதிபர் புடின் சமீபத்தில் ரோஸ்கோஸ்மோஸின் தலைவராக இருந்த டிமிட்ரி ரோகோசினை நீக்கி, முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார். இந்தநிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா வருங்காலத்தில் வெளியேறுவது குறித்தும் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“