சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவின் நாசா வீரர்கள், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர்கள் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு இறுதியில் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டது. வீரர்களை ஏற்றிச் சென்ற விண்கலத்தில் திடீரென கூலண்ட் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து வீரர்களின் விண்வெளி நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது. விண்கலத்தை சரி செய்யும் பணியில் வீரர்கள் மற்றும் பூமியில் உள்ள விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ரஷ்யா மீண்டும் ஒரு ஆளில்லா விண்கலத்தை ஆய்வகத்துக்கு அனுப்பியது. தற்போது அதிலும் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஐ.எஸ்.எஸ்ஸில் உள்ள வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று நாசா-ரஷ்யா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்ட விண்கலத்தில் அழுத்தம் இழப்பு ஏற்பட்டுள்ளது. Progress MS-21 விண்கலம் ஐ.எஸ்எஸ்க்கு அனுப்பபட்டது. பிப்ரவரி 18 பூமிக்கு திரும்ப இருந்த நிலையில், விண்கலத்தில் கூலண்ட் அமைப்பில் அழுத்தம் குறைவதை ரஷ்ய பணிக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
ரோஸ்கோஸ்மோஸ் கூறுகையில், "நிலையத்தில் உள்ள வெப்பநிலை மற்றும் அழுத்தம் விதிமுறைகளுக்குள் உள்ளன. வீரர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், முழு விண்கலமும் அழுத்த இழப்பு ஏற்பட்டதா அல்லது அதன் சில அமைப்புகள் மட்டும் அழுத்த இழப்பை சந்தித்துள்ளனா எனத் தெளிவாகத் தெரியவில்லை என்றது. பின்னர் திட்டக் குழுவின் தலைவர் செர்ஜி கிரிகலேவ், விண்கலத்தின் கூலண்ட் பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தினார். மேலும் அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார். ரஷ்யாவுடன் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து இதனை ஆய்வு செய்து வருகிறது. தொடர்ந்து எதிர்காலத்திலும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாதவாறு முழுமையாக ஆய்வு செய்ய உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
டிசம்பரில் சோயுஸ் MS-22 விண்கலத்தில் கூலண்ட் கசிவு ஏற்பட்டது. அதன் பின் தற்போது மீண்டும் ஒரு விண்கலத்தில் கசிவு ஏற்பட்டுள்ளது. சோயுஸ் விண்கலம் வீரர்களை நிலையத்திற்கு கொண்டு செல்லவும், மீண்டும் பூமிக்கு அழைத்து வரவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஐ.எஸ்.எஸ்ஸில் 7 வீரர்கள் உள்ளனர். இவர்கள் பிப்ரவரி 20-ம் தேதி ஏவப்படும் மற்றொரு சோயுஸ் ரக விண்கலத்தில் பூமிக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/