ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் நேற்று(ஆகஸ்ட் 11) வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நாட்டின் கிழக்கில் உள்ள வோஸ்தோச்னி காஸ்மோட்ரோம் விண்வெளி தளத்தில் இருந்து
சோயோஸ் ராக்கெட் மூலம் லூனா 25 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது. 1976-க்குப் பிறகு ரஷ்யாவின் முதல் நிலவு பயணம் இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலத்தை முந்தி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய விண்கலம் ஐந்தரை நாட்களில் நிலவை அடையும். பின்னர் நிலவின் மேற்பரப்பில் இறங்குவதற்கு முன் 100 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் 3 முதல் 7 நாட்கள் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் தரையிறக்க இந்தியா திட்டமிட்டுள்ள அதே நாளில், ஆகஸ்ட் 23-ம் தேதி லூனா -25 தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, சந்திரனின் தென் துருவம் ஒரு மதிப்புமிக்க இலக்காகும், ஏனெனில் இது கணிசமான அளவு பனியை கொண்டுள்ளது. இது எதிர்கால விண்வெளி ஆய்வுக்கு ஆக்ஸிஜன் மற்றும் எரிபொருளைப் பிரித்தெடுக்க பயன்படுகிறது. இப்போது இந்தியாவும், ரஷ்யாவும் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் நாடு? எது என்ற போட்டியில் உள்ளன.
ரஷ்ய விண்வெளி நிறுவனம் கூறுகையில், மென்மையான தரையிறங்கும் திறன்களை நிரூபிப்பதோடு, லூனா -25 மண் மாதிரிகளை ஆய்வு செய்து சந்திரனின் மேற்பரப்பில் நீண்ட கால அறிவியல் ஆராய்ச்சி நடத்தும் என்று கூறியுள்ளது. இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தில் ஒரு லேண்டர் மற்றும் ரோவர் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும், லூனா-25 மிஷன் விண்வெளியில் சுமார் 1 வருடம் ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் சந்திரனின் மேற்பரப்பில் 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ரஷ்யா சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து, 47 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதல் நிலவு பயணம் இதுவாகும். (USSR) சுவாரஸ்யமாக, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) எந்த உபகரணமும் இல்லாமல் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக சர்வதேச விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸுடனான உறவை முறித்துக் கொண்டது.
ரஷ்யா சோவியத் யூனியனுடன் இருந்த பொழுது நிலவில் பலமுறை மென்மையான தரையிறக்கம் (Soft Landing) செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் லூனா-25 திட்டத்திற்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வாழ்த்து தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil