/indian-express-tamil/media/media_files/2025/09/20/silver-from-e-waste-2025-09-20-16-59-36.jpg)
பழைய எலெக்ட்ரானிக்ஸில் இருந்து வெள்ளி... விஞ்ஞானிகளின் ஸ்மார்ட் கண்டுபிடிப்பு!
ஃபின்லாந்து நாட்டில் உள்ள ஹெல்சிங்கி மற்றும் ஜோவாஸ்கைலா பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பழைய எலக்ட்ரானிக் கழிவுகளில் இருந்து வெள்ளியை எடுப்பதற்கு புதிய, அற்புதமான வழியைக் கண்டறிந்துள்ளனர். இந்த முறைக்குத் தேவையானது, நம் சமையலறையில் இருக்கும் சமையல் எண்ணெய் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு மட்டுமே! இந்த ஆய்வு, கெமிக்கல் இன்ஜினியரிங் ஜர்னல் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய முறை, எலக்ட்ரானிக் குப்பைகளில் இருந்து விலைமதிப்பற்ற உலோகங்களை எடுக்கும் முறையையே மாற்றி அமைக்கும் என்று கூறப்படுகிறது.
வேலை செய்யும் விதம்
சூரியகாந்தி எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களில் உள்ள கொழுப்பு அமிலங்கள், ஹைட்ரஜன் பெராக்சைடுடன் கலக்கப்படுகின்றன. இந்த கலவை லேசாகச் சூடுபடுத்தப்படும்போது, பழைய சர்க்யூட் போர்டுகள், வயர்கள் அல்லது கீபோர்டு கனெக்டர்களில் உள்ள வெள்ளி உருகத் தொடங்குகிறது. அதன் பிறகு, எத்தில் அசிடேட் என்ற நச்சுத்தன்மை குறைந்த பொருளைப் பயன்படுத்தி, உருகிய வெள்ளி திடப்பொருளாக மாற்றப்பட்டுத் தனியாக எடுக்கப்படுகிறது.
ஏன் இது முக்கியம்?
நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ள போன்கள், சோலார் பேனல்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்றவற்றில் வெள்ளி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதில் 20%க்கும் குறைவான வெள்ளி மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. பழைய முறைகளில், வெள்ளி போன்ற உலோகங்களை மீட்கும்போது நச்சுத் தன்மை வாய்ந்த கழிவுநீரும், காற்று மாசுபாடும் ஏற்படும். ஆனால், இந்த புதிய முறை சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆகவே, இந்த புதிய கண்டுபிடிப்பு, நம் வீடுகளில் குவியும் எலக்ட்ரானிக் கழிவுகளிலிருந்து விலைமதிப்பற்ற உலோகங்களை மீண்டும் பெறுவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் ஒரு புதிய, சிறந்த வழியைத் திறந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.