அமெரிக்காவின் எரிசக்தி துறை (DOE) மற்றும் நாசா விஞ்ஞானிகள் இணைந்து சந்திரனின் தொலைதூரத்தில் ரேடியோ தொலைநோக்கியை தரையிறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரபஞ்சத்தின் இருண்ட காலங்களை ஆராய்வதற்கான முதல் படியாக இந்த திட்டம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பிரபஞ்சத்தின் இருண்ட காலம் என்ன?
இருண்ட காலம் என்பது பிரபஞ்சத்தின் வரலாற்றில் பிக் பேங்கிற்கு சுமார் 380,000 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய ஒரு காலகட்டமாகும். பொதுவாக, விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் உள்ள தொலைதூர பொருட்களைப் பார்ப்பதன் மூலம் பிரபஞ்சத்தின் “காலத்தைத் திரும்பிப் பார்க்க” முடியும். . நூறு மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒன்றை நாம் கவனித்தால், அது அந்த கால கட்டத்திலான ஒரு பொருளாக தொழில்நுட்ப ரீதியாக ஆராய முடியும்.
ஆனால் இருண்ட காலத்தில் நட்சத்திரங்களோ, கோள்களோ இல்லாததால், விஞ்ஞானிகளால் இதுவரை எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.
Science என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கட்டுரையில், இருண்ட காலம் என்பது காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி கதிர்வீச்சு உமிழப்பட்ட காலத்திற்கும், பிரபஞ்சத்தின் கட்டமைப்பின் பரிணாம வளர்ச்சியானது நட்சத்திரங்களின் உருவாக்கத்திற்கு வழிவகுத்த பொருட்களின் ஈர்ப்பு வீழ்ச்சிக்கு வழிவகுத்த காலத்திற்கும் இடையில் எங்காவது நடந்திருக்கும் என்று கூறியுள்ளது.
DOE-இன் ப்ரூக்ஹேவன் தேசிய ஆய்வகத்தின்படி, விண்வெளி வல்லுநர்கள் இருண்ட காலத்திலிருந்து ரேடியோ அலைகளைக் கண்டறிய முடிந்தால், இது இருண்ட ஆற்றலின் தன்மை அல்லது பிரபஞ்சத்தின் உருவாக்கம் போன்ற பிரபஞ்சத்தின் சில மிகப்பெரிய மர்மங்களுக்கான பதில்களைக் கண்டறிய உதவ முடியும் என்று கூறியுள்ளது.
The Lunar Surface Electromagnetics Experiment-Night (LuSEE-Night) நாசா மற்றும் எரிசக்கி துறை இடையேயான ஒத்துழைப்பாகும். இது முதல் முறையாக இருண்ட காலத்திலிருந்து சமிக்ஞைகளை அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சந்திரனின் தொலை பக்கத்தில் (far side of the moon) ரேடியோ தொலைநோக்கி நிறுவல்
சந்திரனில் dark side of the moon அல்லது far side of the moon என்று அழைக்கப்படும் பக்கத்தில் இந்த ரேடியோ தொலைநோக்கி நிறுவப்படுகிறது. பெயரை வைத்து இந்த பகுதி எப்போதும் இருட்டாக இருக்கும் என்று கூற முடியாது. பூமியில் இருந்து இந்தப் பக்கத்தைப் பார்க்க முடியாததால் இது இருண்ட பக்கம் என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் உண்மையில் இங்கு பூமியைப் போல் பகல் மற்றும் இரவு சுழற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ப்ரூக்ஹேவனின் கூற்றுப்படி, சந்திரனின் தொலைப் பக்கம் பிரபஞ்சத்தின் இருண்ட காலத்தை ஆய்வு செய்வதற்கான ரேடியோ அலைகளை வழங்குகிறது. இது சவால்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு LuSEE-Night கருவி நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்து பூமிக்கு சமிக்ஞைகளை அனுப்ப வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/