உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று (அக்டோபர் 25) பகுதி அளவு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கிட்டத்திட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பகுதி சூரிய கிரகணம் நிகழவிருப்பதால் இது அரிய நிகழ்வு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இது இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும்.
ஐரோப்பாவின் சில பகுதிகள், வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளிலில் கிரகணத்தை காண முடியும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பகுதி சூரிய கிரகணத்தை காண முடியும்.
சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் நிகழும். உலக நேர கால அட்டவணைப்படி மதியம் 2.15 முதல் மாலை 6.30 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மத்திய பகுதியில் 80% வரையிலும், இந்தியாவில் 40% வரையிலும் சூரிய கிரகணத்தை காண முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு நேரங்களில் கிரகணத்தை காணலாம்.
அதன்படி, தமிழகத்தில் மாலை 5.14க்கு தொடங்கி 5.45 மணி வரை 30 நிமிடங்கள் சூரிய கிரகணத்தை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8% வரை கிரகணம் தெரியும் எனவும் கூறியுள்ளனர்.
கிரணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கிரகணத்தின் போது சூரிய கதிர்கள் கண்ணுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதால் அதை வெறும் கண்களால் பார்க்க கூடாது. அறிவியல் ஆலோசனை பெற்ற தொலைநோக்கி, எக்லிப்ஸ் கண்ணாடிகள் போன்ற சிறப்பு உபகரணங்கள் கொண்டு பார்க்க வேண்டும்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ்’ (IIA) லடாக்கின் ஹான்லேயில் உள்ள ஒரு கண்காணிப்பகத்திலிருந்து கிரகணத்தின் நேரடி ஒளிபரப்பு, நிறுவனத்தின் YouTube சேனலில் நேரலையில் உள்ளது. லைவ் ஸ்ட்ரீமில் ரஷ்யா மற்றும் கஜகஸ்தானில் இருந்து ஒரு ஸ்ட்ரீம் இடம்பெறும், அங்கு கிரகணம் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது.
சூரிய கிரகணத்தையொட்டி கோயில்கள் மூடப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பதி ஏழுமலையான கோயில்கள் மூடப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது.
பல ஐரோப்பிய நாடுகளில் பகுதி சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தெரிய தொடங்கியது சூரிய கிரகணம்

இந்தியாவில் முதலில் ஜம்மு காஷ்மீரின் லே-வில் சூரியகிரகணம் தெரியத் தொடங்கியது. பின்னர் டெல்லியில் தெரிய தொடங்கி, பாட்னா, பெங்களூரு ஆகிய இடங்களிலும் தெரியத் தொடங்கியுள்ளது.