/tamil-ie/media/media_files/uploads/2022/10/NASA-SpaceX-Crew-5-mission-20221006.jpg)
'க்ரூ-5' திட்டம்: ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்ற 4 வீரர்கள்!
க்ரூ-5 திட்டத்தின் மூலம் 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/NASA-SpaceX-Crew-5-mission-20221006.jpg)
Advertisment
நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு க்ரூ-5 திட்டம் (crew 5 mission) திட்டத்தின் மூலம் 4 வீரர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். க்ரூ டிராகன் காப்ஸ்யூலுடன் கூடிய ஃபால்கன் 9 ராக்கெட் நேற்று (புதன்கிழமை) இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. பின் விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
க்ரூ-5 திட்டத்தில் 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாசா விண்வெளி வீரர்கள் நிக்கோல் மான் மற்றும் ஜோஷ் கசாடா, ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்சா) விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அன்னா கிகினா ஆகியோர் க்ரூ-5 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மான் மற்றும் கசாடா ஆகிய இருவரும் முறையே மிஷன் கமாண்டர் மற்றும் பைலட்டாக பணியாற்றுவார்கள். மீதமுள்ளவர்கள் மிஷன் நிபுணர்களாக பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த அன்னா கிகினா, 38 வயதான விண்வெளி வீராங்கனை. நாசா, ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்திற்கு கிகினா நன்றி தெரிவித்தார். விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்தவுடன், இந்த சிறந்த வாய்ப்பை தனக்கு அளித்ததற்காக நாசா, ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் சர்வதேச விண்வெளி நிலைய (ஐஎஸ்எஸ்) குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாக கிகினா தெரிவித்தார். விண்வெளி பயணத்திற்காக கிகினா கடந்த ஆண்டு முதல் நாசாவில் பயிற்சி பெற்று வந்தார்.
புதன்கிழமை ராக்கெட் ஏவப்பட்டு சுமார் ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டின் மேல் தளம்,
க்ரூ டிராகனை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தியது. ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 16,000 மைல் (27,000 கிமீ) வேகத்தில் விண்வெளியில் சென்றது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் கீழ்-நிலை பூஸ்டர் பகுதி பூமிக்குத் திரும்பியது, கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
நான்கு குழு உறுப்பினர்களும் அவர்களின் தனித்தனி காப்ஸ்யூல்களும் சுமார் 29 நேர பயணத்திற்கு பிறகு, இன்று (வியாழன்) மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும். பூமியிலிருந்து சுமார் 250 மைல் (420 கிமீ) தொலைவில் உள்ள சுற்றுப்பாதை ஆய்வகத்தில் 150 நாட்கள் தங்கியிருந்து அறிவியல் பணியை மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பபட்டுள்ள நிக்கோல் அவுனாபு மான் (45 வயது) விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்க பூர்வீகுடி பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன க்ரூ டிராகனின் தலைமை இருக்கையை அலங்கரித்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.